சிவகாசியில் தேர்தல் வாக்குறுதியை பத்திரமாக எழுதிக்கொடுத்த பெண் வேட்பாளர்

0
885

..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் தேர்தல் களம் விறுவிறுப்படைய துவங்கியுள்ளது. வார்டுகளில் போட்டியிடும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

தாரை, தப்பட்டை முழங்கவும், வேட்பாளருக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்துடனும் வாக்கு சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில வாக்காளர்கள் நூதன பிரச்சாரமும் செய்து வருகின்றனர். இதில் திமுக கட்சியின் பெண் வேட்பாளரின் பிரச்சாரம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

திருத்தங்கல் பகுதியில் உள்ள, சிவகாசி மாநகராட்சியின் 5ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் (28). பட்டதாரியான இவர், அந்தப்பகுதியின் திமுக கட்சியின் மாணவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி இந்திராதேவி (23). யும் பட்டதாரி.

கணவன், மனைவி இருவரும் சமூகசேவை செய்வதில் அதீத ஈடுபாடு உள்ளவர்கள். அந்தப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காமல், அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு பல பணிகளை நீண்ட நாட்களாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தற்போது நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் 5வது வார்டில், இந்திராதேவி திமுக கட்சி சார்பாக போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் வார்டில், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். வார்டுப்பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவுநீர் வாறுகால் வசதி, சாலை வசதி, தெருவிளக்குகள் வசதி அனைத்தும் செய்து தரப்படும். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு கண்டிப்பாக லஞ்சம் வாங்க மாட்டேன் என்பன உள்ளிட்ட உறுதி மொழிகளை, 10 ரூபாய் பத்திரத்தில் எழுதி வேட்பாளர் இந்திராதேவியும், அவரது கணவர் மாரீஸ்வரனும் கையெழுத்திட்டு பொதுமக்களிடம் வழங்கி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கட்சியின் பெண் வேட்பாளரின் இந்த நூதன பிரச்சாரம், அந்தப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here