சென்னை மாநகராட்சியில் உள்ள 24 பள்ளிகளில், 5,785 மாணவர்களுக்கு மட்டும் காலைச் சிற்றுண்டி கொடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை அட்சய பாத்ரா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
பல லட்சம் பேருக்கு பகல் உணவு போடும் கட்டமைப்புள்ள, அதற்கென ஆயிரக்கணக்கில் ஊழியர்களை கொண்டுள்ள ஓர் அரசு தேவையற்ற முறையில் அப்பொறுப்பை தனியார் அமைப்பிடம் அர்ர்ப்பணிக்க வேண்டிய அவசியம் ஆராயத்தக்கது.
அட்சய பாத்ரா என்பது இஸ்கான் என்னும் கிருஷ்ண பக்தி அமைப்பின் கிளை. இஸ்கான் அமைப்பு ஒரு காலத்தில் மக்கள் அதிருப்தியை சம்பாதித்து இந்தியாவிலிருந்து பின் வாங்கிய ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்ற இயக்கத்தின் குட்டி. அமெரிக்காவிலிருந்து செயல்படும் பன்னாட்டு அமைப்பு.
இலட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு முழுவதும் மதிய உணவிடும்போது, காலை உணவு தயாரிப்பது ஒன்றும் சத்துணவு திட்ட ஊழியர்களுக்கு கடினமல்ல. மேலும், சில கோடிகளிலேயே பிள்ளைகளுக்கு திருப்தியாக உணவு வழங்க முடியும் சூழலில், சென்னை மையப் பகுதியான கிரீம்ஸ் சாலையோரம் 20,000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை இஸ்கான் அமைப்புக்கு அரசு தாரை வார்த்திருக்கிறது. இந்த இரு இட நில மதிப்பு இன்றைக்கு ரூ.500 கோடி. நிலம் வழங்குவதற்குள் கவர்னர் தனது நிதியிலிருந்து எடுத்துக்கொடுத்த பணம் ரூ.5 கோடி.
இந்நிறுவனத்தினர் ‘சாத்விக’ உணவுகளையே சமைக்கவும் உண்ணவும் செய்வார்கள். அதாவது, நமது உணவில் முதலிடம் பெறும் வெங்காயத்தையும் பூண்டையும் அவர்கள் சிறிதும் சேர்ப்பதில்லை. அவை சூத்திரருக்குரிய ’தமஸ்’ குணத்தை அதிகரித்து விடுமாம். அதனால்தான் பிராமணர்களும் அவற்றை உணவில் சேர்ப்பதில்லை.
கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை 71 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுத்தி வரும் அட்சய பாத்ரா, அங்கு மாநில அரசே உத்தரவிட்டும் பூண்டையும், வெங்காயத்தையும் உணவில் சேர்க்க முடியாது என ‘கட் அன்ட் ரைட்’டாக மறுத்து விட்டது.
இவ்வாறு கர்நாடக அரசுக்கே தண்ணி காட்டும் இஸ்கான் மதிய உணவுத் திட்டத்திற்காக அரசிடம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானோரிடமும் நன்கொடை பெறுகிறது. பல்லாயிரம் சூத்திரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, சூத்திர பிள்ளைகளுக்கு சூத்திர குணம் வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பூண்டு, வெங்காயம் இல்லாத உணவை சமைக்கிறது இஸ்கான்.
இப்படி மாநில அரசின் ஆணையையும் மீறி செயல்படுவதற்கு காரணம், இஸ்கான் பரமசிவன் கழுத்து பாம்பு. மத்திய அரசின் சகா.அதனால்தான் தமிழ்நாட்டில் கவர்னர் மூலம் சத்துணவு திட்டத்தில் அது வலிந்து திணிக்கப்படுகிறது.
சிறு பிராயத்தில் உடலில் சேர வேண்டிய சத்துக்காக அய்யங்காரான ஜெயலலிதா கூட முட்டை போடும் திட்டத்தை முன்மொழிந்த நிலையில், தமிழ் குலத்தாரான பழனிச்சாமி சுத்த சைவ (வீகன்) சமையல்காரர்களை அமர்த்தியிருப்பது மத்திய அரசின் நிர்பந்தத்தால் தான் என தெரிகிறது.
புதுவையில் காங்கிரஸ் அரசு அட்சய பாத்திரா அறக்கட்டளையுடன் 12.6.2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. அங்கு 12 மதிய சமையல் கூடங்களுக்கு மாற்றாக ஒரே ஒரு மையத்தில் இருந்து மதிய உணவு தயாரிக்கப்பட உள்ளது. அதேபோல்தான் இங்கும் சமையல் நடக்கும்.
பல மணி நேரத்திற்கு முன்பாகவே ஓரிடத்தில் சமைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால் சூடும் சுவையும் குன்றும். உணவின் தரமும் ஊட்டமும் குறைந்துவிடும்.
உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பு, உள்ளூரில் பொருள் கொள்முதல், உள்ளூர் உணவுகளையே வழங்குதல் என்பனதான் சத்துணவு திட்டத்தின் அடிப்படை. உப்பு சப்பில்லாத உணவை நம் குழந்தைகளுக்கிட்டு அவர்களை வேதனைப்படுத்துவது நல்லதல்ல.
ஏற்கனவே இந்த அமைப்பினர் சமைத்துக்கொடுத்த உணவின் சுவை பிடிக்காமல் பட்டினி கிடப்பதும், பள்ளிக்கு வர மறுப்பதுமாக கர்நாடக பிள்ளைகள் அழிச்சாட்டியம் செய்கின்றன. இந்நிலையில், இங்கும் பள்ளியை மாணவர்கள் புறக்கணிக்கும் நிலையை இஸ்கான் உணவு ஆக்குவது உறுதி. ஏனெனில், சுவையும் ஊட்டமும் மிகுந்த பூண்டு, வெங்காயம் இல்லாத உணவை நம் பிள்ளைகள் சாப்பிட விரும்பா. வருங்காலத்தில் மதிய நேர சத்துணவுத் திட்டத்தையும் அரசு இதனிடம் வழங்கினால் என்னாகும் என யோசித்துப்பாருங்கள்.
அதுமட்டுமல்ல, இந்திய கணக்கு தணிக்கை குழு 2015ல் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில், ‘அட்சய பாத்திரா தயாரித்த உணவின் 187 மாதிரிகளை ஆய்வு செய்ததில் உணவு தரமாக இல்லை. உணவு தானியம் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. விரும்பி சாப்பிடுவதில்லை என 75 சதவீத மாணவர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளது.
17.6.2019ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சாகர் நகரில் உள்ள இஸ்கான் அலுவலக வளாகத்தில் இருந்து குழந்தைகள் உணவுக்காக அரசு வழங்கிய அரிசி கடத்தப்பட்டது. 18.8 டன் அரிசி 50 கிலோ வீதம் 350 பைகளில் நிரப்பப்பட்டு காக்கிநாடாவுக்கு எடுத்துச்செல்ல லாரியில் ஏற்றப்பட்டதை மாவட்ட அதிகாரிகளே பார்த்து அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், இஸ்கான் சார்பில் பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்திலேயே அங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள், பள்ளி உணவிலும் வர்ணாஸ்ரம தர்மத்தை நுழைக்க அரசு தயாராகி விட்டதல்லவா?