தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக புதிய கவர்னராக நாகலாந்து மாநில கவர்னர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பு ஏற்க பன்வாரிலால் புரோகித் இன்று காலை 9 மணிக்கு பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக பழைய விமான நிலையம் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் பன்வாரிலால் புரோகித்திற்கு வழியனுப்பு விழா நடந்தது. பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்பட அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி வருகின்ற 17ந்தேதி பதவியேற்றுக் கொள்கிறார். இதற்காக வருகிற 16ந் தேதி இரவு 8 மணிக்கு சென்னை வருகிறார். அப்போது விமான நிலையத்தில் புதிய கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.















