மனநலம் பாதித்தவர்களுக்கு முடிவெட்டும் தொழிலதிபர்

0
944


நெல்லைசாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.இவர் கூலிங் டைல்ஸ் ஏஜென்சிஸ் வணிகம் செய்து வருகிறார். சமூக சேவைகளில் ஆர்வமுடையவர். ஜேசிஐ என்ற அமைப்பில் பாளையங்கோட்டை கிளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வீதிகளில் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பதோடு அவர்களுடைய முடியையும் வெட்டிவிடும் சமூகப் பணியை செய்து வருகிறார்.

நீண்ட காலம் குளிக்காமல் இருப்பவர்களுடைய முடியை வெட்டுவது எளிதான செயல் அல்ல. அவை துர்நாற்றம் அடிப்பதோடு, கடினமாகவும் இருக்கும். முடி வெட்டும் தொழிலில் இருப்பவர்கள் கூட செய்ய தயங்கும் விஷயத்தை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். நெல்லை டவுணில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சேவை அமைப்புகளின் மூலம் மீட்டு நெல்லை மாநகராட்சி அவர்களுக்கு உணவு வழங்கி பராமரித்து வருகிறது. அந்தப் பள்ளிக்கு அடிக்கடி செல்லும் செல்வராஜ் தகுந்த உடைகளை அணிந்துக்கொண்டு முடிதிருத்தும் கருவிகளோடு களத்தில் இறங்கி அங்குள்ள மனநலம் குன்றியோர் மற்றும் ஆதரவற்றோருடைய முடியை வெட்டி அவர்களை குளிப்பாட்டி அழகு படுத்துகிறார்.

இதுகுறித்து செல்வராஜி டம் கேட்டபோது, “தொழில் நிமித்தமாக நான் காரில் செல்லும் பொழுது சாலையோரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், ஆதரவற்றோர்களும் பரிதாபமாக அமர்ந்து இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். கடந்த சில வருடங்களாக அவர்களுக்கு புத்தாடைகளை வழங்குவதோடு அவர்களுக்கு முடியையும் வெட்டி விடுகிறேன். அவர்களில் பெரும்பாலோனோர் சரியான முறையில் குளிப்பதில்லை. இதனால் தலையில் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்து தூசி, அழுக்கு நிரம்பி அவர்கள் நோய்வாய்ப்பட அது காரணமாக அமைகிறது. எனவே அவர்களுக்கு என்னால் முடிந்த வரையில் தலைமுடியை வெட்டி விடு வேன்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது மனதிற்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here