கோவை மாவட்டம், பிஆர்எஸ் வளாகத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காப்பு தணிக்கை செய்வதற்காக ஆயுதப்படையை சேர்ந்த தலைமை பெண் காவலர் செண்பக வடிவு என்பவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காவலர் குடியிருப்பு வளாகத்திற்குள் காவல் உயர் அதிகாரியின் வாகனம் சென்றுள்ளது. செண்பக வடிவு அதிகாரியின் வாகனத்தை உற்றுநோக்கிய போது, அதை ஓட்டி வந்த நபர் அசோக சின்னம் உள்ள தொப்பியை மாறுபாடாக வைத்திருந்ததை கண்டார். உடனே வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்ததோடு, அந்த வழியாக வந்த 2 சிறப்பு காவல் படைக் காவலர்களை உதவிக்கு அழைத்து அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்த அடையாளம் தெரியாத நபரை வாகனத்தை விட்டு இறக்கியுள்ளனர்.
இந்நிலையில் மாநகர காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அவரிடம் அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்தவரை செண்பக வடிவு ஒப்படைத்தார்.
அவரின் இந்த தீரச்செயலை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சான்றிதழ் வழங்கினார்.














