I
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். (44). இவர் கோவை கருமத்தம் பட்டி அடுத்த சோமனூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கங்காதேவி (39). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் பெங்களூருவில் படித்து வருகிறார்.
கங்காதேவி தனது வீட்டின் அருகே பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். வழக்கமாக அவர் பணிமுடிந்து மாலை 8 மணிக்கு வீடு திரும்பி விடுவார். ஆனால் கடந்த 6-ந் தேதி இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது கணவர் சீனிவாசன் பியூட்டி பார்லர் சென்று மனைவியை அழைத்து வர போனார். அங்கு சென்று அவர் பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலும் கங்காதேவி இருந்தார்.அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், தனது மனைவியின் கை, கால்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்த்ததுடன், நடந்தது குறித்து விசாரணை நடத்தினார்.
அப்போது கங்கா தேவி 3 கொள்ளையர்கள் வந்து தன்னை கட்டிப்போட்டுவிட்டு 19 பவுன் நகையை கொள்ளையடித்ததுடன், அவர்கள் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அழுதபடியே கூறினார்.
இதை நம்பிய சீனிவாசன், தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆறுதல் படுத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துவிடுவோம் என்று சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால் போலீசில் புகார் செய்ய வேண்டாம்.
கொள்ளையர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், வெளியே தெரிந்தால் நமக்கு தான் அசிங்கம் என்று கங்காதேவி கூறினார். கொள்ளையர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்த சீனிவாசன் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் மறுநாள் காலையில் புகார் செய்தார். இதனால் கங்காதேவி அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் அழகுநிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கங்காதேவியையும் அழகு நிலையத்துக்கு வந்து கொள்ளை நடந்த விவரங்களை கூறுமாறு போலீ சார் கேட்டுக்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
அழகுநிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கங்காதேவி எதுவும் தெரியாதது போல் நின்றார். ஆனால் எதிரில் உள்ள ஒரு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யப்போவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கங்காதேவி வீட்டுக்கு வந்தார்.
பின்னர் திடீரென்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் கணவர் சீனிவாசன் மற்றும் அவருடைய மகன் கதறி துடித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் துப்புதுலக்கி நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கங்காதேவியின் செல்போனை கைப்பற்றியபோது, அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தன. பெங்களூருவில் இருந்து மகள் போனில் பேசியது மட்டும் இருந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது கடந்த மாதம் கங்காதேவியின் மற்றொரு செல்போன் திருட்டு போனதாக கணவரிடம் தெரிவித்து இருந்தது தெரியவந்தது.
அந்தபோன் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்தபோது, மதுரையை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் அந்த போனை பயன்படுத்தி வருவதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கங்காதேவி யாரிடம் எல்லாம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் என்று போன் நம்பரை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் முத்துபாண்டி என்பவரிடம் தொடர்ந்து பல முறை பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஊட்டியில் பதுங்கி இருந்த முத்துபாண்டி (42) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் திடுக்கிடும் உண்மை வெளியே வந்தது.

போலீஸ் விசாரணையில்
முத்துப்பாண்டி கூறும்போது
மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த நான், மனைவி மற்றும் குழந்தை களைவிட்டு பிரிந்து இருந்தேன், கடந்த 2020-ம் ஆண்டு முதல் கங்காதேவியுடன் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
அப்போது எனக்கு வேலை இல்லை என்றும், வேலை வாங்கி தரும்படியும் கங்காதேவியிடம் கூறினேன்.
உடனே என்னை அவர் கோவை மாவட்டம் சோமனூர் வரச்சொன்னார். உடனே நானும் சோமனூர் வந்தேன். பின்னர் அவர் எனக்கு அவினாசியில் உள்ள ஒரு மில்லில் வேலை வாங்கி தந்தார்.
அங்கு தங்கி இருந்த நான், எனக்கு வாரவிடுமுறை அன்று சோமனூர் செல்வேன்.
நான் அங்கு செல்லும் நாளில் எனக்கு 3 வேளையும் உணவை கங்காதேவி கொண்டு வருவார். அழகுநிலையத்தில் இருந்து அந்த உணவை சாப்பிட்டு நாங்கள் உல்லாசமாக இருந்தோம். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வதற்காக எனக்கு அவர் புதிய செல்போனும் வாங்கி கொடுத்தார்.
அதில் அவ்வப்போது வீடியோ காலிலும் பேசிக்கொள்வோம். நாங்கள் அழகுநிலையத்தில் ஒன்றாக இருக்கும்போது ஒருவித பயம் கங்காதேவி யிடம் இருந்தது.
மேலும் தனது கணவர் ஓட்டல் தொழிலில் பிசியாக இருப்பதால் தன்னை சரியாக கவனிப்பது இல்லை என்றும், இப்படி தினமும் பயந்து வாழ்வதற்கு பதிலாக இருவரும் வேறு எங்காவது சென்று சேர்ந்து வாழலாம் என்று என்னிடம் கூறினார். எனவே 2 பேரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்தோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போனில் தொடர்பு கொண்ட கங்காதேவி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாகவும், அதன்படி செய்தால் இருவரும் எங்கேயாவது போய் சந்தோஷமாக வாழலாம் என்றும் கூறினார். நானும் அந்த திட்டத்தை ஆர்வமாக கேட்டேன்.
பியூட்டி பார்லர் ரில் நகையை வைத்து இருந்ததாகவும், வடமாநில வாலிபர்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்துவிட்டு போய்விட்டனர். என்னையும் பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிட்டதாக எனது கணவரிடம் கூறி விடுகிறேன்.
இதனால் அவமானம் தாங்காமல் வெளியில் சொல்ல மாட்டார். என்கூடவும் வாழ மாட்டார். அதன் பின்னர் 2 பேரும் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று ஜாலியாக வாழலாம் என்றார். இந்த யோசனை எனக்கு பிடித்தது.
அதன்படி கடந்த 6-ந் தேதி நான் கங்காதேவியின் அழகுநிலையத்துக்கு வந்தேன். அங்கு 2 பேரும் சேர்ந்து உல்லாசமாக இருந்தோம். பின்னர் நாங்கள்சொல்லி வைத்தபடி எங்களது நாடகத்தை அரங்கேற்றினோம்.
ஆனால் கங்காதேவி கூறியபடி, அவருடைய கணவர் கேட்கவில்லை.
போலீசில் புகார் செய்துவிட்டார்.
நாங்கள் திட்டமிட்டது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று என்பதால் கங்காதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எனக்கு தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். நான் தற்கொலை செய்ய வேண்டாம் என்று கூறினேன்.
மேலும் போலீஸ் விசாரணையின்போது நடந்த சம்பவங்களை எனக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியபடி இருந்தார். நான் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஊட்டிக்கு சென்றுவிட்டேன்.
கங்காதேவி நடத்தி வந்த அழகுநிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை.
ஆனால் எதிரே உள்ள ஒரு கடையில் கண்காணிப்பு கேமரா இருந்தது.
அதில் நான் அங்கு சென்ற காட்சி பதிவாகி இருக்கும் என்பதால், எங்கள் கள்ளக்காதல் விஷயம் தெரிந்துவிடும் என்று கருதி பயந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
என்னிடம் அவர் பேசி வந்த போன் மூலம் நானும் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு கள்ளக்காதலன் முத்துபாண்டி போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இதையடுத்து போலீசார் கள்ளக்காதலனான முத்துபாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் முத்துபாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொள்ளை நாடகம் நடத்தி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.















