நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா வழக்கில் தற்போது புதிய தகவல்கள் பல வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மோசடி தொடர்பாக மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்தனர். தன்னை போல மேலும் பலர் இதேபோன்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக மாணவர் உதித் சூர்யா வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசாருக்கு உதித் சூர்யா போன்று மேலும் 4 அல்லது 5 மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல் தெரியவந்தது. இந்நிலையில் அந்த மோசடி மாணவர்களும் தற்போது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாணவி உட்பட 4 பேரை கைது செய்திருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் சுற்றி வலைத்திருக்கிறது. அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே இவர்களை போல் இன்னும் எத்தனை மாணவர்கள் இந்த நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.





