கோவில்பட்டியில் நடந்த திமுகவின் ’நான் ரெடி, நீங்கள் ரெடியா?’ பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தூத்துக்குடி பிரச்சினை பற்றி குறிப்பிட்டதாவது:
அருகில் இருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திற்குக் 616 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னிடம் பொறுப்பை கருணாநிதி ஒப்படைத்தார். 12 மாதத்தில் முடிக்க வேண்டிய பணியை 10 மாதத்தில் முடித்து இப்போது குடிநீர் சென்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேரை சுட்டுக் கொன்றது இந்த ஆட்சி. அது ஒரு கருப்பு நாள்.
பேரணியைக் கலைக்கவேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சென்னைக் கோட்டையில் இருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டார்கள். அதனால் தடியடி நடத்தப்பட்டது. அதற்குப்பிறகு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 13 பேரை காக்கை குருவிகளை சுட்டுத் தள்ளுவது போலச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் நிலை தான் இருந்தது. எதுவும் தெரியாதது போல பாவலா செய்து கொண்டிருந்தார்.
முதலமைச்சர் நேரடியாக வந்து பார்க்கவில்லை. அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் அந்தக் கொடுமைக்கு இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்ததற்குப் பிறகு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமின்றி அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் நிச்சயமாக நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் ரத்து செய்வோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணம், போதிய டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு நலவாரியம் வேண்டும். ஆண் பெண் இருவருக்கும் சம ஊதியம் என்ற யோசனைகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உப்பளத் தொழிலாளர்களின் நலனை மனதில் வைத்து கொண்டு விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. அரசு நிச்சயமாக அவர்களுக்கு துணையாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் அப்போது முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.













