தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி தலைவியாக ஹிமேரா ரமீஸ் பாத்திமா உள்ளார். அவரது கணவர் அசாப் அலி பாதுஷா உறுப்பினராக உள்ளார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவராக நகர திமுக செயலாளர் மால் ராஜேஷ் உள்ளார்.
பேரூராட்சி தலைவர் வகையறாக்களும் திமுகவினர் தான் என்றாலும், தங்களுடைய கை நீட்டத்துக்கு தடையாக இருந்ததாலோ, என்னவோ துணைத் தலைவரை நறநறத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கேற்ற நல்வாய்ப்பும் வந்தது.
அறுவை சிகிச்சை காரணமாக உடல் நலம் குன்றி இருந்த துணைத் தலைவர் மால் ராஜேஷ், மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரவில்லை. இதை பயன்படுத்தி அவரது பதவியை பறிக்க பேரூராட்சி தலைவர் திட்டமிட்டார். துணைத் தலைவர் மருத்துவ சான்று அளித்த நிலையிலும், கூட்டத்தில் கலந்து கொள்ளாததை சாக்கிட்டு அவரை வெளியேற்ற இன்று நடைபெறும் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை வைத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த திமுக தொண்டர்கள் சிலர், ‘உட்கட்சி பூசலாலும், ஊழல் பிரச்சனையாலும் இந்த உள்குத்து நடக்கிறது. இதற்கு உள்ளூர் அமைச்சரின் ஆசியும் இருக்கிறது. கட்சி வளர்ச்சிக்கு இது கேடாக முடிந்து விடும் போல் தெரிகிறது ‘ என்கிறார்கள்.
எப்படியோ, நெல்லை, கோவை மாநகராட்சிகள் தொடங்கி, நகராட்சி பேரூராட்சி வரை நண்டுகடி வேலையையும் சிண்டு முடியும் வேலையையும் திமுகவினர் ஜரூராக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் கட்சி முடிவு செய்துள்ளதாம்.. எல்லாம் விளங்கினாற்போல் தான் என்று தொண்டர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.