நிழலுக்கும் பயந்து சாகும் மனிதர்கள் வரலாற்றில் நிலைத்திருப்பதில்லை. ஜெயலலிதா காலம் தொட்டு அடிமைத்தனத்தில் மூழ்கியிக்கும் அதிமுகவினர், அந்த அம்மாவுக்கு பின்னால் வந்த சின்னம்மாவுக்கு எவ்வளவு அஞ்சுவார்கள் என்பது அகிலமே அறிந்த ரகசியம். ஆனாலும், அதை வெளிக்காட்டாமல் நாசூக்காக நடிக்க கூட தெரியவில்லை.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனைக்கு பின் விடுதலையடைந்து பெங்களூருவில் தங்கி ஓய்வெடுத்த சசிகலா இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். 50க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு, ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவல் என அமமுகவினர் அமர்க்களப்படுத்தப் போகின்றனர். அது அவர்கள் உரிமை.
ஆனால், தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டியதுபோல், அதிமுகவினர் கலகக்த்தில் இருப்பதுதான் கலகலக்க வைக்கிறது.
செப்டம்பர் 2017ல் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது . அதிமுக கொடியைப் பயன்படுத்துவதை சட்ட ரீதியாகத் தடுக்க முடியாது என்றே தெரிகிறது.
அப்படியே தடுக்க நினைத்தாலும், அதை அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆக உள்ள முதல்வரும், துணை முதல்வரும் தடுக்கலாம். அதை விடுத்து, ’கலவரம் நடத்த சதி’ என்றெல்லாம் கத்தி கதி கலங்குவது கேவலம்.
கொரோனாவை அடிப்படையாக வைத்து ஜனநாயக அமைப்புகளின் கூட்டத்தை தடை செய்வது போல், முதல்வரே தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிடலாம், அல்லது டிஜிபியிடம் அறிவுறுத்தலாம். அதைவிட்டு, போலீஸ் துறையை கையில் வைத்துக்கொண்டே அமைச்சர்கள் கூட்டம் டிஜிபியிடம் மாதாந்தம் அலைவதை பார்த்து அரசியல் தெரிந்தவர்கள் காறித் துப்புகின்றனர். இவர்கள் வீரம் எல்லாம், எண்ணிக்கை குறைந்த கருப்பர் கூட்டம் போன்ற அமைப்புகளிடம் தான்.
ரத்தம் முழுக்க அச்சம் கலந்தோட, ஜெயலலிதா நினைவிடத்தை மூடுகிறார்கள், அதிமுக தலைமையகத்தின் முன்பு பலத்த பாதுகாப்பு போடுகிறார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அவசர ஆலோசனை நடத்துகிறார்கள்.
முதல்வர் தனது பிரசார பயணத்தை ரத்து செய்கிறார். அமைச்சர்கள் சசிகலாவை பற்றி பேட்டி கொடுக்க குலை நடுங்குகிறார்கள்.
சசிகலா வால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சராக (தொடக்கத்தில்) பதவி பெற்றவர் ஜெயக்குமார், மற்றும் பிறரும் அவ்வாறே பதவி பெற்றனர். அந்த தயக்கம் அவர்கள் பேச்சில் இருக்கிறது.
வட மாவட்ட அமைச்சர்களான சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன் போன்றோரே ஓரளவு சசிகலாவிடம் நெருக்கம் பாராட்டாதவர்கள். அதனால்தான் மூத்த அமைச்சர்கள் இருந்த பேட்டியில் சண்முகத்துக்கு கொம்பு சீவினர்.
’சசிகலா மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சிறைக்குச் சென்றவர்’ என்று சண்முகம் கூற , செய்தியாளர் ஒருவர், ’சசிகலாவுடன் சேர்த்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஏ1 ஆக இருந்த ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துமா?’என்று கேட்க அவர் முகத்தில் ஈயாடவில்லை.
தங்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் தவிர்க்க முடியாமல், மாநகராட்சி ஆணையரை வைத்து பேனருக்கு தடை என்றும், போலீசார் மூலம் பேரணிக்கு தடை என்றும் அறிவிக்கிறார்கள்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்ந்தாலும், போஸ்டர் ஒட்டுவதும் தொடர்கிறது. ஓபிஎஸ் மகள் சசிகலாவை வரவேற்று பதிவிட்டது சகஜமானதல்லை, எடப்பாடியின் நிகழ்ச்சி ரத்தும் யதார்த்தமானதல்லை. ஓபிஎஸ்சுக்கு கட்சியில் அளித்துள்ள அதிகாரத்தில் திருப்தியில்லை.
அதிமுகவில் உள்ள செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டு கட்சிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளதை துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பாஜகவுடன் சசிகலா அட்ஜஸ்ட் செய்தால் அதிமுகவில் பெரும்பகுதியை கைப்பற்றிவிடுவார். இல்லாவிட்டாலும் அதிமுக உடைவது உறுதி. கோழைகள் கையில் இருக்கும் ஓர் இயக்கம் குலைந்து போவதில் வியப்பில்லை.