ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் கமல் பிரசாத் (26) .இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு விவசாயம் செய்துவந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி( 23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது செல்வநாயகி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வநாயகி விஷம் குடித்தார் .அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வநாயகிநேற்று இறந்தார் .இந்த நிலையில் மனைவியை உடனிருந்து கவனித்து வந்த அவரது கணவர் கமல் பிரசாத்தும் மனம் உடைந்து விஷம் குடித்துவிட்டு கோவையில் இருந்து காரில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தெக்கலூர் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கமல் பிரசாத் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் விஷம் குடித்துவிட்டு கார் ஓட்டி சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













