கோவை ரத்தினபுரி சங்கநூர் ரோடு சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் கண்ணன் என்கிற அப்துல்காதர்( 42) .இவரது மகள் பவுசியா (15) கணபதி பகுதியில் உள்ள சிஎம்எஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இயங்காமல் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு செல்போன் ஒன்றை அவரது குடும்பத்தார் வாங்கி கொடுத்துள்ளனர். பவுசியா வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களிலும் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது தாயாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவுசியா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.இந்நிலையில் பவுசியா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது தந்தை கண்ணன் என்கிற அப்துல் காதர் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்துவதை தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உளளது.











