,
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தைச் சோ்ந்தவா் மணி (30). இவா், கோவை சிங்காநல்லூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த செந்தில் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் சோ்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். இந்நிலையில், மணியும், செந்திலும் ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு நேற்று முன்தினம் சென்றனா். அங்கு செந்திலின் சகோதரா் ரகுராம், அவரது நண்பா்கள் அனீஷ்குமாா், அஜித்குமாா், ஆண்டனி, சத்யா ஆகியோருடன் சோ்ந்து இவா்கள் மது அருந்தியுள்ளனா்.
அப்போது, அவா்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரகுராமின் நண்பா் அனீஷ்குமாா் (28) மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியைக் குத்தினாா்.
சிங்காநல்லூா் போலீஸாா் மணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, நேற்று காலை மணி உயிரிழந்தாா். இதுகுறித்து, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 5 பேரைக் கைது செய்தனா்.













