இந்து மகாசபை தலைவர்களில் ஒருவராக இருந்த கமலேஷ் திவாரி. 2015ல் அதிலிருந்து இந்து சமாஜ் என்ற தனி இயக்கத்தை தொடங்கினார். இந்நிலையில் லக்னோவில் அவருக்கு இனிப்பு கொடுப்பது போல நடித்து சிலர் கொலை செய்தனர்.
2015ல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆஸாம்கான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று கூறியதற்கு பதிலடியாக நபிகள் நாயகத்தை ஓரினச் சேர்க்கையாளர் என்று கமலேஷ் திவாரி குறிப்பிட்டிருந்தார்.
இதனால் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தினர் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் மீதே குற்றச்சாட்டு கூறிவருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொலையை முன்வைத்து இந்து, முஸ்லிம்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் இந்து அமைப்புகளும், சில ஊடகங்களும் முயன்றன. இதை கமலேஷ் திவாரியின் தாயார் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
பிரச்சனை குறித்து விவாதம் நடத்திய டிவி சேனல் ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளர் இவ்வாறானா கோணத்தில் விவாதத்தை கொண்டுசென்றபோது அதில் பங்கேற்ற கமலேஷ் திவாரியின் தாயார் குசும் திவாரி, ‘ இந்த விவகாரத்தை இந்து- முஸ்லிம் பிரச்சனையாக மாற்றக் கூடாது’ என கடுமையாக எச்சரித்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குடும்பத்தாருடன் குசும் திவாரி சந்தித்தார். அப்போது, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கவேண்டும் என கோரிக்கை வைத்ததாக ஒரு சாராரும், கமலேஷ் திவாரிக்கு சிலை வைப்பது, தெருவுக்கு அவர் பெயரை சூட்டுவது என்று கோரிக்கை வைத்ததாக ஒரு சாராரும் கூறிவருகின்றனர்.















