ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீரும் மூன்று மாவட்டங்களுக்கு விவசாய பாசன நீர், வணிக பயன்பாட்டுக்கான நீரும் வழங்குகின்ற தாமிரபரணி, l கோடையில் நீரோட்டம் குறைந்து மெலிந்து நடக்கிறது. அதை மேலும் நலிவடையச் செய்யும் வகையில் பல்வேறு வகையான மாசுக்கள் கலக்கின்றன.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் சாக்கடை நீரை ஆற்றுக்குள் விடுகின்றன. அதிலும், நெல்லை மாநகராட்சியில் பல லட்சம் லிட்டர் சாக்கடை நீர் தாமிரபரணி ஆற்றில் தினந்தோறும் கலக்கிறது. இதை நிறுத்துமாறும், பாதாள சாக்கடை திட்டத்தை முற்றிலும் நிறைவேற்றுமாறும் தொடர்ந்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் மாநகராட்சியை வலியுறுத்தி வந்தது.
ஆனாலும் அதற்கு பலன் இல்லாததாலும், கடந்த ஒரு மாதமாக ஆற்றுக்குள் சாக்கடை கலப்பு அதிகரித்தாலும், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கபோவதாக தெரிவிக்கப்பட்டது .
அதன்படி இன்று காலை தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ தலைமையில், மாநகர செயலாளர் மகேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில், அருட்தந்தையர் பெஞ்சமின், பிரான்சிஸ் சேவியர், மை பா, அருட் சகோதரி அருள் மேரி, இயக்க சிறப்பு கருத்தாளர்களான வியனரசு, குயிலி நாச்சியார், கண்மணி மாவீரன், முத்துக்குமார், முத்து வளவன், புகாரி, மாரி சங்கர், உடையார், நெல்சன், பீட்டர், சிற்பி பாமா, ராகவன், வக்கீல் புலித்துரை, பிலிப் மாணிக்கராஜ் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்களான மணிவண்ணன், ஆதிநாராயணன் இசக்கிமுத்து, செல்வம், சாந்தா ரோஸ், ஜெசிந்தா, பொன் ராணி, சிலுவை பிரகாசம், கேப்டன் கணேசன், ஜெயகோபால், ஜெயராஜ் ஆசிரியர், பிரவீன், இசபெல்லா, சரோஜா, கிருஷ்ணன்,பால்ராஜ், மாரியம்மாள், டோரா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அனைவரும் கைகளில் தாமிரபரணி ஆற்றில் எடுக்கப்பட்ட தண்ணீர் புட்டியை ஏந்தி, “குடிநீரில் சாக்கடையை கலக்காதே’, ‘ பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்று’ என கோசமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் காவல்துறையினர் அனுமதித்தவாறு 15 பிரதிநிதிகள் ஆணையரிடம் மனு அளிக்க மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்றனர்.
இன்று மாநகராட்சி மனுநீதி நாள் என்ற போதிலும், மேயரோ, ஆணையரோ மனுக்களை வாங்க அலுவலகத்தில் இல்லை. இதனால் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியில் மணிக்கணக்கில் காத்து நின்றனர். அதனாலும், ஏற்கனவே மனு வாங்குவதாக ஆணையர் உறுதி அளித்து, அதற்கு மாறாக அலுவலகத்தில் இல்லாததாலும், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆணையர் அறை முன்பு உட்கார்ந்து முழக்கமிட்டு தர்ணா செய்தனர்.
இதையடுத்து மாநகராட்சி துணை ஆணையர் தாணுமூர்த்தி விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் மனுவை பெற்று, ’20 நாட்களுக்குள் சாக்கடை நீர் கலக்காதவாறு தற்காலிக மாற்று ஏற்பாடு செய்யப்படும், கழிவுகளை கொட்ட விடாமல் ஆற்றுக்குள் அறிவிப்பு பலகை நிறுவப்படும், சிந்து பூந்துறை, கொக்கிரகுளம் பகுதியில், பாதாள சாக்கடை நிறைவேற்றப்பட்டும், வெளி கால்வாய் விடப்படும் கழிவு நீர் நிறுத்தப்படும், சலவைத் துறை நிறுவப்படும், பாதாள சாக்கடை திட்ட விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால் 40 நாட்களுக்குப் பின்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
பின்னர் அனைவரும் அமைதியாக வெளிவந்த நிலையில், திடீரென்று 15 பேரையும் கைது செய்வதாக காவல்துறை ஆணையர் சரவணகுமார் அறிவித்தார். அவர்களை மட்டுமின்றி, ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு வெளியில் அமைதியாக நின்ற மேலும் 12 பேரையும் வேனில் ஏற்றி, கைது செய்து நெல்லை சந்திப்பில் உள்ள விடுதியில் போலீசார் அமர வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜிகே மணி, பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சுப உதயகுமார், நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் பல்வேறு சமூக நல இயக்க ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினர். இதையடுத்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.