நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை

0
1267

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.

குறிப்பாக,தமிழகத்தில் எப்படியாவது மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக நடுத்தர வர்க்கத்திற்கு முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது பயிற்சி மையங்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல்(JAL NEET ACADEMY) என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு பயின்ற 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அதிக மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர் சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண்,பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெறுவதற்கு வருவதாகவும் தெரிகிறது.

எப்படியாவது மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்பதற்காக தினம் தேர்வு, 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி என மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள்.

இந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை தேர்வு முடிந்து மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாகக் கூறப்பட்டது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், மாணவர்களை பிரம்பால்(கம்பால்) சரமாரியாக தாக்கியுள்ளார்,

இதனால் மாணவர்களுக்கு உடலில் கை, கால், முதுகு, பின்புறம் என பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையம் இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பதால், இந்த பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணியை விட்டு வர வேண்டும்

ஒரு மாணவி தவறுதலாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்றி வேறு இடத்தில் காலணியை விட்டு வந்துள்ளார். அந்த காலணி யாருடையது என ஆசிரியர் கேட்டு,என்னுடையது என மாணவி எழுந்து வந்தவுடன், அந்த மாணவி மீது காலணியை தூக்கி வீச, அந்த காலனி சக மாணவிகள் விழுவதும் சி சி டிவியில் பதிவாகியுள்ளது.

மேலும், மாணவர்களை அவதூறாக பேசுவது, தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது.

இது குறித்த புகாரின் அடிப்படையில், பயிற்சி மைய உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் , பயிலும் மாணவர்களிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here