கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தொழிற்துறை ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வணிகத் துறை இயக்குநர் சி.ஜி.தாமஸ் வைத்யன், மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து கடந்த ஜூன் மாதம் 2ஆம், 3ஆம் தேதிகளில் நடத்திய இரு காணொளி
கூட்டங்களில் கொடிசியாவும் பங்கெடுத்துக் கொண்டது.
அந்த கூட்டங்களில் மானியத்திற்காக விண்ணப்பித்துள்ள தொழிற்சாலைகளுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் மானியத் தொகை விடுவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு தொழிற்துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டது. அவர் உறுதியளித்தபடியே கோவைக்கு வரவேண்டிய 14 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டது.
இந்த கொரோனா பெருந்தொற்று சூழலில் தொழிற்சாலைகளுக்கு இந்த நடவடிக்கை பெரும் உதவியாக அமைந்தது. மீதியுள்ள 1.2 கோடி ரூபாய் மானியத் தொகையும் விரைவில் விடுவிக்கப்படும் என்று நம்புகிறோம்.
கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக பொது முடக்கத்தின் காரணமாக கோயம்புத்தூரில் எவ்விதமான தொழில் வணிக நடவடிக்கையும் முழுமையாக நடைபெற இயலவில்லை.
இந்த பொதுமுடக்கத்தின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகின்றனர். வணிக நடவடிக்கைகள் முற்றிலும் நின்று போன நிலையிலும் தொழில்முனைவோர் கடன் தொகை, வரிகள், மின்கட்டணம், தொழிலாளர் ஊதியம், வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க வேண்டிய சிக்கலான நிலையில் உள்ளனர்.
எனவே, தொழிற்சாலைகள் முழுமையாக இயங்காத வரையில் அவற்றை நடத்துவது என்பது தொழில்முனைவோருக்கு ஒரு பெரும் சுமையாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.மேலும், தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொழிற்சாலைகளுக்கு எந்தவித நன்மையும் தரவில்லை என்பதோடு, சரியான போக்குவரத்து வசதி போன்றவை இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்து மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
எனவே, வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் இந்த பொது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்து 100{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} தளர்வுகளை அறிவிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.











