நெல்லை மாவட்ட ஊராட்சி தேர்தலில் 11 திமுக கவுன்சிலர்களும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எதிர்ப்பே இல்லாமல் திமுக சேர்மன் பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ள நிலையில், போட்டி இல்லாத தேர்தல் ருசிக்காது என்று எண்ணியோ இல்லையோ திமுக பிரமுகர்கள் ஆட்டத்தை தொடங்கிவிட்டனர்.
சட்டமன்றத்தில் தானே நடுநிலை. இங்கு எதற்கு என்று சபாநாயகர் அப்பாவுவும் களமிறங்கிவிட்டார். அவரும் எம்பி ஞானதிரவியமும் ஒருபுறம் இருக்க, எம்.எல்.ஏ.அப்துல் வகாப் மறுபுறம் நிற்கிறார். கட்சிபேதம் இல்லை என்றாலும் வேறு பேதம் ஆகிவிடுமோ என்ற அளவுக்கு மோதல் போக்கு முறுகி நிற்கிறது.
மாவட்ட ஊராட்சி தலைவருக்கான கோதாவில் குதித்திருப்பவர்களும் பாரம்பரிய திமுகவினர் இல்லை. அமமுகவிலிருந்து விலகி வந்த செல்வலட்சுமி அமிதாப்பும், அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட விஎஸ் ஆர் ஜெகதீசின் மனைவி செளம்யாவுமே வேட்பாளர் அந்தஸ்தில் இருக்கின்றனர். செல்வலட்சுமி வேட்பு மனுவிலேயே ரூ.25 கோடிக்கு சொத்தை குறிப்பிட்டிருந்தவர். விஎஸ்ஆரும் செல்வத்தில் குறைந்தவர் அல்லர். இருவருமே கோடீஸ்வரர்கள் என்பதால் போட்டி பலமாக இருக்கிறது.
இன்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில் 10 பேர் மட்டுமே பதவியேற்றனர். அதிலும் செல்வலட்சுமி, செளமியா தரப்பில் 5 பேர், 5 பேராக வந்து பதவியேற்றனர். 2ஆவது வார்டு கவுன்சிலர் மகேஷ்குமாரும், 3ஆவதுவார்டு கவுன்சிலர் கனகராஜும் பதவியேற்கவில்லை.
அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பது போன்ற நிலவரம் உள்ளது. காரணம், மகேஷ்குமாரை காணவில்லை என்று அவரது தாத்தா தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சொந்த கட்சிக்காரர்களையே கடத்தவேண்டிய இந்த துர்பாக்கியத்துக்கு காரணம், கவுன்சிலர் தேர்தல் முடிவுக்கு பின்பு வேட்பாளர் யார் என்று திமுக தலைமை உறுதியாக தெரிவிக்காதது தான் என்று சொல்லப்படுகிறது. இன்னும் தலைமை மெளனம் காத்தால் கட்சி மானம் சந்தி சிரித்துவிடும் என்கின்றனர்.