கூல் ட்ரிங்க்ஸுக்கு பணம் கேட்டதால் பேக்கரி சூறை போதை கும்பல் கைது

0
540

கோவை அவிநாசி சாலையில் பீளமேடு சுகுணா கல்யாண மண்டபம் எதிரே டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை அருகிலேயே மகாராஜா பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்  கடையில் அனுமதி இல்லாமல் 24 மணி நேரமும் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 6 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கி உள்ளே உள்ள பாரில் சென்று மது அருந்தி விட்டு வெளியே வந்தனர். பின்னர் அருகில் உள்ள மகாராஜா பேக்கரிக்கு சென்று கூல்ட்ரிங்ஸ் வேண்டும் என கேட்டுள்ளனர்.

அப்போது  பேக்கரியில் திருநெல்வேலி மாவட்டம் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கேஷியர் செல்வின் துரை (24) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சப்ளையர் மணிகண்டன்( 22) ஆகியோர் பணியில் இருந்தனர். போதையில் இருந்த வாலிபர்களிடம் பேக்கரியில் இருந்தவர்கள் பணம் கொடுத்தால் கூல்டிரிங்ஸ் கொடுப்பதாக கூறியிருக்கின்றனர். அதில் ஆத்திரமடைந்த போதையில் இருந்த வாலிபர்கள், ‘ எங்களிடமே பணம் கேட்கிறாயா?’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில் போதையில் இருந்த கும்பல் பேக்கரிக்குள் புகுந்து கேஷியர் மற்றும் சப்ளையரை அடிக்கத் தொடங்கினர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பேக்கரியில் இருந்த பொருட்களை போதையில் வந்த கும்பல் அடித்து நொறுக்கினர். சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பேக்கரியில் இருந்து உணவுப் பொருள்கள் அனைத்தையும் தூக்கி வீசி சூறையாடினர் .பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் பேக்கரியில் பணிபுரிந்த செல்வின் துரை மற்றும் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கு வந்த பீளமேடு போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசிடிவி  கேமரா காட்சி மூலம் பேக்கரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (23), கௌதம்(22), அருள்நந்தி (22),தினேஷ்(21),மணி(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here