வரும் ஜூன் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது என முன்னாள் அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார். அதற்காக அனுமதி கோரி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவர் மனு அளித்தார்.
அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கொறாடா பதவிக்கு கே.பி.முனுசாமி காய்நகர்த்துவதாவும் சொல்லப்படுகிறது.
ஆனால், ஓபிஎஸ் துணைத்தலைவர் பதவியை பெறப்போவதில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒருங்கிணைப்பாளரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் சம்பந்தமாக யாரும் இதுவரை ஆலோசிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே திருநெல்வேலியில் ஓபிஎஸ்சை மதிக்கவேண்டும் என்று எச்சரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வழக்கறிஞரான முக்கிய பிரமுகரின் ஆசியுடனேயே இந்த சுவரொட்டி கலகம் தொடங்கப்பட்டுள்ளதாக கமுக்கம் நிலவுகிறது. வழக்கம்போல் நெல்லை மண்டலத்திலிருந்து எதிர்ப்பு சலசலப்பு கிளம்புகிறது என்றாலும், பரவலாக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இந்த எண்ணமிருக்கிறது.
இருவரிடையே சண்டையை எதிர்பார்த்து சசிகலா அணி இருக்கிறது. சந்தர்ப்பம் பார்த்து இரும்புத் தலைவி இவரே என்ற முழக்கத்துடன் அவரை இழுத்துவரவும் சிலர் தயாராகவே உள்ளனர். சத்தம், சச்சரவு இன்றி துணைத்தலைவர், கொறடா தேர்வு நடந்தால் நல்லது. இல்லையேல், மீண்டும் ஒரு பிரிவினைக் குழுவை உருவாக்கும் வகையில் இது அமைந்துவிடும் என்று அதிமுக நலம் விரும்பிகள் கூறுகின்றனர்.














