பணி மாறிய நிலையிலும் அரசுக்கு 34 பக்க கொரோனா தடுப்பு ஆலோசனை: வேலூர் ஆட்சியர் அக்கறை

0
892

வேலூர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு விழிப்புணர்வு,வளர்ச்சி பணிகள் ஆற்றி மக்களிடம் நற்பெயர் ஈட்டிய சண்முகசுந்தரம்,பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், கொரோனா மூன்றாம் அலை வந்தால் செய்ய வேண்டிய பணிகளை குறித்து தனது ஆலோசனைகளை 34 பக்கங்கள் கொண்ட கடிதமாக எழுதி அதை அரசின் தலைமை நிலைய செயலாளர் இறையன்பு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதில், ‘ தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையின் பாதிப்பு ஏற்படும்போது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் தொற்று பாதிப்பு குறைவானவர்களை பராமரிப்பு மையத்திலும், மற்றவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இதற்காக கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி பின்னாளில் அந்த படுக்கைகளை அரசு மாணவர் விடுதிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனையில் 60 விழுக்காடு படுக்கைகள் நிரம்பியதும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களின் அறிவுரையை பெற வேண்டும்.

தொற்று பாதித்த குழந்தைகளுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கும் சேர்த்து படுக்கை, தலையணை, பிரஷ், பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட தொகுப்பை வழங்க வேண்டும்.

தற்போது கொ ரோனா நோயாளிகளுக்கு மட்டும் கரோனா சிறப்பு உணவு வழங்கப்படும் நிலையில் மூன்றாவது அலையின் போது குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை வழங்குவது போன்றே தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இணைநோயால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உருமாற்றம் அடையும் கரோனா வைரஸின் மரபணு வரிசை(Genome Sequencing) கண்டறிந்து அதன் பரவலை கட்டுப்படுத்துகின்றனர். இந்த ஆய்வக வசதியை தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்திட வேண்டும்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இந்த ஆய்வக வசதி இருந்தாலும் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆய்வை நடத்த மத்திய அரசு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிஎம்சி மருத்துவமனை அறிக்கையின் படி குழந்தைகளை பாதிக்கும் மூன்றாம் அலையில் சிகிச்சைக்கு தேவைப்படும் Intravenous Immunoglobulin G என்ற மருந்தை அதிகம் இருப்பு வைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இவற்றை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும்.

ஒரு ஊசியின் விலை ரூபாய் 12 ஆயிரம். பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு 5 ஊசிகள் தேவைப்படும். மாவட்டங்களில் ஆர்டிபிசிஆர்(RTPCR) பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ஒரு பரிசோதனை மையத்தை அரசு அமைக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வேலூர் மாவட்டத்திற்கென்று சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார் அதில், ‘வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள 915 ஆக்ஸிஜன் ப்ளோ மீட்டர்(Oxygen Flow Meter), 660 எண்ணிக்கையில் டி-வகை ஆக்சிஜன் சிலிண்டர்(T – Type Oxygen Cylinder) கூடுதலாக தேவைப்படுகிறது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 16 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் விநியோக கட்டமைப்பு, குடியாத்தம் மற்றும் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைகளுக்கு தலா 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் விநியோக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதி இல்லாத 555 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்,

குழந்தைகளுக்கான ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள்(Paediatric Pulse Oxymeter), 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள்(Oxygen Concentrators), குழந்தைகளுக்கான 200 எண்ணிக்கை படுக்கைகள், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கவும் பாலூட்டும் தாய்மார்கள் உடனிருந்து கவனித்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் ‘என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here