தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாட்ஸ் ஆப்பிற்கு, அந்த பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற புகைப்படத்தை வாட்ஸ் ஆப் அனுப்பி, அதை மற்றவர்களுக்கும் அனுப்பி கேவலப்படுத்தப் போவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டினார். தொடர்ந்து பல்வேறு ஆபாசமான குறுஞ்செய்திகளையும் தொடர்ந்து அனுப்பினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்மந்தபட்டவரை கைது செய்யுமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் ஆல்வின் பிர்ஜித் மேரி தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் உட்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவருக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி மிரட்டியவர் தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டித் தெருவைச் சேர்ந்த கிளமென்ட் மகன் ஆனந்தராஜ் (32) என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
