மதுரையில் கரும்பூஞ்சை நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 38 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை மாவட்டத்தில் 3 பேர் கரும்பூஞ்சை தொற்று அறிகுறி பாதிப்பால் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
தேனி போடியைச் சேர்ந்த இந்தப் பெண் கடந்த மே 19ஆம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் பக்கவாதம் ஏற்பட்டதால் ஜூன் 1ஆம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரும்பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டு தொற்று மூளைக்குள் பரவிய நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் காரணமாக கரும்பூஞ்சை நோய் தாக்கியதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக திண்டுக்கல் வேடசந்துாரைச் சேர்ந்த சேர்ந்த 38 வயது ஆண் கரும்பூஞ்சை பாதிப்பு அறிகுறி இருந்ததால் மே 8ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 30 ஆம் தேதி காலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முத்துவேல் என்ற 63 முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கரும்பூஞ்சை வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தற்போது கரும்பூஞ்சை தொற்று உயிரிழப்புகள் மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு சேர்த்து கரும்பூஞ்சைக்கான தனி வார்டில் சிறப்பு மருத்துவகுழுவினரை நியமித்து கரும்பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தட்டுபாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.














