தென் தமிழகத்தில் செயல்படும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றுபவர் ஏரலைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெயபாலன். இவரது தொடர்ச்சியான சமூக சேவையை பாராட்டி இரு நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் இலங்கை கல்லூரி சார்பில் ‘ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ல் ஏற்பட்ட பெருவெள்ளப் பேரழிவின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சேவையில் ஈடுபட்டவர் ஜெயபாலன். குறிப்பிட்ட காலம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். பின்பு முற்றிலும் சமூகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2015 முதல் 2018 வரை மூன்று ஆண்டுகள் மாவட்ட சிறைச்சாலையில் அலுவல்சாரா பார்வையாளராக அரசால் நியமிக்கப்பட்டு சிறைவாசிகளுக்கு தொண்டாற்றியுள்ளார். 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தென்னக ரயில்வே கோட்டத்தில் பயனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார்
தற்போது தாமிரபரணி மீட்பு பணியோடு,ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய அனைத்துப் பள்ளிகளின் சத்துணவு கண்காணிப்பு குழு உறுப்பினராகவும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வருடைய காலை உணவு திட்டத்திலும் கண்காணிப்பு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட 2011 முதல் இதுவரை தொடர்ச்சியாக ஆற்று தூய்மைப் பணி, சுகாதார விழிப்புணர்வு பணிகளை திறம்படச் செய்து வருகிறார்.
ஏரலில் தனி ஒரு மனிதனாக நின்று பொதுமக்களின் தேவைகளுக்காக அரசை அணுகி நிறைவேற்றி வருகிறார். அடிப்படை வசதிக்கான அகிம்சை போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.
இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில்
மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் தலைமையில் நடைபெற்றது.
ஐரோப்பிய பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகி டாக்டர் எஸ்.எம் ரஷ்மி ரூமி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
சமூக ஆர்வலர் ஜெயபாலன் சார்பில் அவருடைய மனைவி சகாய கெலினால் மற்றும் அருட் சகோதரி சகாய க்ளம்பென்ட்டின், அருளாளர் டேவிட், இஸ்மாயில் புகாரி நாகூர் மீரான், ஆசிரியை ஜோஸ்பின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் பட்டம் பெற்ற ஜெயபாலனுக்கு ஏரல் வட்டார பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர் சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.