உலக சுகாதார அளவைகள், மதிப்பீடுகள் கழகம் தயாரித்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்கில் இந்தியாவில் 10 லட்சம் கொரோனா மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என்கிறது. இப்போதே சில லட்சங்களை எட்டிவிட்டநிலையில். ஆயிரக்கணக்கிலேயே அவ்வப்போது கொரோன மரண எண்ணிக்கை சொல்லப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை குறைத்து சொல்லப்படுகிறது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும், இது உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் காட்டமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மரணங்களை குறைத்து காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றமும், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன், நெல்லை அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் 57 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர். ஆனால் அன்று மாலை வெளியிட்ட அரசு பட்டியலில், வெறும் ஆறு பேர் மட்டுமே என தெரியப்படுத்தப்பட்டது.
இது தற்போது இல்லை, கடந்த அதிமுக ஆட்சியிலும் நடந்தது. நெல்லை மட்டும் மல்ல, அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான், இறந்தவர்களின் எண்ணிக்கையில், 10 சதவீதமே காட்டப்படுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என, அதிகாரிகள் மறைக்கின்றனர்.
பொய்யுரையும், புகழுரையும் வேண்டாம். உண்மை நிலவரத்தை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என கலெக்டர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கொரோன இறப்பு விகிதத்தை மறைக்காதீர்கள். உண்மை நிலமையை வெளிப்படையாக தெரிவியுங்கள் என ஆய்விற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தெரிவிக்கிறார்.
ஆனாலும், ஏனோ உண்மை நிலவரத்தை மறைக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாகிறது. இனியாவது தான் கூறியபடியே உண்மை நிலவரத்தை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.