பாளை மத்திய சிறையில் விசாரணைக் கைதி முத்து மனோ இறந்தது தொடர்பாக பல ரகசிய தகவல்கள் பரவுகின்றன. முத்து மனோ ஒரு குறிப்பிட்ட சாதியின் குழுத் தலைவருக்கு கீழ் செயல்பட்டு வந்துள்ளார். தலைவரது செல்வாக்கைப் பயன்படுத்தியே பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். வல்லநாடு அருகே தாத்தா, பேரன் கொலை வழக்கிலும், களக்காடு அருகே மாணவரை கொல்ல முயன்ற வழக்கிலும் இவர் முக்கிய பங்கு வகித்ததாக மற்ற இரு சாதி குழுக்களை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர்.
இந்நிலையில் அவர் பாளை மத்திய சிறையில் ஏ பிளாக்கில் தனியாக வைக்கப்பட்டுள்ளார்.அந்த பிளாக்கிற்கு முந்தைய பிளாக்கில் வேறு சாதி இளைஞர்கள் இருந்தனர். முத்து மனோ தனித்திருந்த சூழலை பயன்படுத்தி, அவர்களும், மற்றொரு சாதி இளைஞர்களும் சேர்ந்தே இவரை தாக்க திட்டமிட்டதாகவும், அதற்கு ஒரு சிறை அதிகாரி மற்றும் சில காவலர்கள் உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
சிறை அதிகாரி மற்றும் காவலர்கள் உடந்தையாக இல்லாமல் தொடர்ந்து கடினமாக தாக்கி மண்டையை உடைத்து இருக்க முடியாது என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். தீவிர விசாரணைக்குப் பின்பே பெரிய உண்மை தெரியும்.
ஆனாலும், ஒரு விசாரணைக் கைதியை பாதுகாக்க முடியாத அளவிற்கு பாளை மத்திய சிறையில் காவல் அமைப்பு பலவீனமாக இருப்பதும், அங்கு சாதிய உணர்வு மேலோங்கி இருப்பதும் வெளிப்பட்டுள்ளது.









