பாகிஸ்தான் நிதிபற்றாக்குறை ரூபாய் ரூ.3.445 டிரில்லியன் ஆகும், இது கடந்த பாகிஸ்தான் பொருளாதார ஆய்வுகளின்படி 1979-80 முதல் அதிகபட்சமாகும்.
பாகிஸ்தானின் ஆண்டு நிதி பற்றாக்குறை கடந்த மூன்று தசாப்தங்களில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது, இது 2018-19 நிதியாண்டில் 8.9 சதவீதமாக உள்ளது. நிதிப் பற்றாக்குறை என்பது மத்திய அரசின் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். ஜூன் மாதத்தில் முடிவடைந்த ஆண்டில் பற்றாக்குறை பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 6.6 சதவீதமாக இருந்தது என்று டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வாக்குறுதியுடன் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தார். கடந்த மாதம் பாகிஸ்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ.5.15 ஆகவும், லிட்டருக்கு ரூ .5.65 ஆகவும் உயர்த்தியது. இருந்தும் பொருளாதாரம் சீரடையவில்லை
தற்போது பாகிஸ்தான் பிரதமர் செயலகம் தற்போது மின் நிறுவனத்திற்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்து உள்ளது. பல நினைவூட்டல் அனுப்பப்பட்ட போதிலும், செயலகம் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டதாக மின் வினியோக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இஸ்லாமாபாத் மின்சார விநியோக நிறுவனம் (ஐஸ்கோ) ஆகஸ்ட் 28 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்று கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்து உள்ளது.
நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால் நாங்கள் மின்சார விநியோகத்தை துண்டித்துவிடுவோம் தொடர்ந்து இது போன்று பிரதமர் அலுவலகத்துடன் பிரச்சினை வருகிறது என மின் வினியோக நிறுவனம் கூறியதாக ஐஏஎன்எஸ் கூறி உள்ளது.