காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பாலாற்று மேம்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்து கொண்டு இருந்தன. தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மேம்பாலத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த மேம்பாலத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கல்குவாரிகள் மற்றும் கல்அறுவை தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் இருந்து கிரஷர்மண், ஜல்லிகற்கள் ஊரடங்கு முன் 200க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு மேம்பாலத்தின் வழியாக செல்லும்போது லாரிகளில் இருந்து கீழே கொட்டும் கிரஷர்மண் மேம்பாலத்தின் ஓரங்களில் டன் கணக்கில் படிந்து உள்ளது.

இதனால் மேம்பாலத்தில் வழியாக இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் பொதுமக்களுக்கு எந்நேரமும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஊரடங்கினால் மேம்பாலத்தில் வாகனங்கள் குறைவாக செல்லும் போதே மேம்பாலம் ஓரங்களில் உள்ள கிரஷர்மண் துகள்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.











