என்.ஐ.ஏ அமைப்பால் தேடப்பட்டு வரும் அல் உம்மா இயக்க தீவிரவாதியை சென்னை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 5 ஆம் தேதி சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் 7.50 லட்சம் பணம், 282 கிராம் தங்க நகையை 2 மர்ம நபர்கள் வழிப்பறி செய்த வழக்கில் யாசின் என்பவனை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், மற்றொரு முக்கிய குற்றவாளியான ரஃபீக் என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ரஃபீக்கை பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அல் உம்மா இயக்கத்துக்கு தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பான வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட ரஃபீக்கிற்கு தொடர்பு உள்ளது என்பதும் ரஃபீக்கை என்.ஐ.ஏ அமைப்பு கடந்த 4 வருடங்களாக தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















