கோவை கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். கல்குவாரி உரிமையாளர். இவரது வீட்டுக்கு டிப்-டாப் உடையணிந்த 5 மர்ம ஆசாமிகள் கடந்த 15 ஆம் தேதி மதியம் காரில் வந்தனர். பின்னர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து, பஞ்சலிங்கத்திடம் ‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்’ என்றுக்கூறி ஒரு அடையாள அட்டையை காண்பித்தனர்.
மேலும் அவரை ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு, படுக்கை அறைக்கு சென்ற அந்த ஆசாமிகள், அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை எடுத்தனர். பின்னர் நாளை காலை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கூறிவிட்டு அதே காரில் தப்பி சென்றனர். மேலும் தங்களுடன் அவரது ஜி.எஸ்.டி. புத்தகம், 5 காசோலைகள், விலை உயர்ந்த செல்போன், சி.சி.டி.வி. கேமரா ஹார்டு டிஸ் க் ஆகியவற்றையும் எடுத்து சென்றனர்.
அடுத்தடுத்த நிமிடங்களில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பஞ்சலிங்கம், கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார், கல்குவாரி உரிமையாளரை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்த ஆசாமிகளை வலவைவீசி தேடி வந்தனர்.

அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர்கள் போலியான எண் பொருத்திய காரில் சென்றது சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி சாலை கற்பகம் கல்லூரி அருகே வைத்து கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (36) சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் (37) கணபதி ராஜீவ் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் மோகன் குமார் (30) ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் . அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர் .
தொடர்ந்து இவர்களுக்கு உதவி செய்ததாகவும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கிணத்துக்கடவு மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் ராமசாமி (47) கிணத்துக்கடவு பகவதி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஆனந்த் (47) மற்றும் பேரூர் காளம்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் தியாகராஜன் (47) ஆகிய ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன் மேத்யூ (60), காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் மகேஸ்வரன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.














