பொய், பித்தலாட்டம், ஏமாற்று, ஆகியவற்றின் ஒட்டுமொத்த டீலர் கல்கி ஆசிரமத்தை வருவாய் துரை அதிகாரிகள் கலைத்துப்போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பகவானோ அந்தர்தியானமாகிவிட்டார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது ஆசிரமங்களில் அதிரடி வருமான வரி சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான இந்திய, வெளிநாட்டு பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் ஆப்ரிக்க நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கியது, சட்டவிரோதமாக முதலீடு செய்தது குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் வெளிநாட்டு பக்தர்களுக்கு போதைப் பொருள்களைக் கொடுத்து ஆபாச செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்ததாகவும் இவர் மீது புகார் எழுந்தது.

எல்.ஐ.சி. முகவரான விஜயகுமார், தனியார் பள்ளி ஆசிரியரானார். பின்னர் தானே ஒரு பள்ளியையும் தொடங்கினார். 1989ல் திடீரென ஒரு நாள் தன்னை கடவுளாக பிரகடனப்படுத்தினார். தான் விஷ்ணுவின் அவதாரம் என்றும், தனது பெயர் கல்கி பகவான் என்றும் தன்னை புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். விஜயகுமார் கல்கி பகவான் ஆன காரணத்தினால் அவரது மனைவி பத்மாவதி ‘அம்மா பகவான்’ ஆனார்.
சாதாரண எல்.ஐ.சி. முகவராக, பள்ளி ஆசிரியராக இருந்த கல்கியை கடவுளின் அவதாரம் என்று ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. உடனே, கிராமங்களில் 10ஆம் வகுப்பு வரை படித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்து, வெள்ளை உடுப்பு கொடுத்து விஜயகுமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செய்யவைத்தார்.
தொடர்ந்து ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆசிரமம் ஒன்றும் அமைத்து ஆசி வழங்கும் வேலையை தொடங்கினர். பக்தர்களின் நம்பிக்கை நாளுக்குநாள் வளர்ந்த நிலையில் உலகம் முழுவதும் ஆசிரமங்கள் கிளைவிடத் தொடங்கின.
ஹ்ரித்திக் ரோஷன், ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிக, நடிகைகள் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகு பெரிய பட வாய்ப்புகள் வந்ததாக புளுகித்தள்ளினர்.
கல்கி பகவானை தரிசிக்க ரூ.50,000, அவரது பாதத்தை கழுவ ரூ.10,000 என அனைத்திற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தீட்சை அடைவதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்றாம் நிலைக்கு 21,000 ரூபாயும் வழங்கவேண்டும் எனவும் பணம் வசூலிக்கிறார். 90களில் இவரது ஆண்டு வருவாய் 43,000 ரூபாய். இன்று 1,200 கோடி ரூபாய்.
அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணா கோடிக்கணக்கான முதலீட்டில் பல தொழில்களை செய்துவருகிறார். இவருக்கு மட்டும் 33 வெளிநாட்டு சொகுசுக்கார்கள் சொந்தமாக உள்ளன. பெரும்பாலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் இவரது வாசம்.
ஆந்திராவில் 5 ஆயிரம் ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் சொத்துகள், ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சொந்தமாக 1000 கோடிக்கு மேல் சொத்து.
அவை இல்லாமல் அவரது மகனின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நிறுவனம், பெங்களூருவில் உள்ள கட்டுமான நிறுவனம் என பக்தர்களின் நம்பிக்கையால் சேர்ந்துள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களையே தற்போது வருமானவரித்துறையினர் சோதனை மூலம் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் உள்ள வரதய்ய பாளையத்தில் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பல நூறு ஏக்கர் நிலத்தையும், வனத்துறை நிலத்தையும் ‘ஆட்டையைப்’ போட்டதாக புகார் இருக்கிறது.
தனது களியாட்டங்களுக்காகவே ஒரு ஸ்டூடியோவை உருவாக்கி, 25 வயதுக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் அங்கு தீட்சை வழங்குவார். இவரது அந்தரங்க உண்மைகள் தெரிந்த பவன், விகாஷ் என்ற இரு நிர்வாகிகள் மர்மமான முறையில் இறந்தனர். விபத்து என்று வழக்கு முடிக்கப்பட்டது.
ஆக, ஆன்மீக மோசடி, கிரிமினல் குற்றக்காட்சிகள் நிறைந்த கல்கி பகவான் பார்ட் 1 முடிந்து, வருமான வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி என்ற 2ஆவது பாகம் தொடங்கியுள்ளது.
காவல்துறை, வருவாய் துறை, வனத்துறை என யாவும் கல்கியின் அவதார முகத்துக்கு அரிதாரம் பூசிய நிலையில், வருமான வரித்துறை அவரது மோசடி வேடத்தை கலைத்துள்ளது. மறைவேடம் புனைந்து, கருப்பு பணப் பூதமாக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மோசடி சாமியார் தலைமறைவாகியுள்ளார். முன்பொருமுறை இப்படித்தான் தனது ஜென்மம் பூர்த்தியாகிவிட்டதாக கூறி தலைமறைவானார். இப்போது விசாரணைக்கு பயந்து மாயமாகியுள்ளார். எல்லாம் நமது ஜனநாயகத்தின் லீலை.














