கோவை சூலூர் அடுத்த பழனியப்பன் தேவர் வீதி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் சுரேஷ்குமார் (46). இவருக்கு ரேவதி சோபியா என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது வீட்டின் ஒரு பகுதியில் உதயகுமார் என்பவர் குடியிருந்து வந்தார். உதயகுமாருக்கும் ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ளது.
இந்நிலையில் உதயகுமாருக்கும் ரேவதி சோபியாவுக்கும்கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இந்த கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது . கடந்த ஒன்றாம் தேதி ரேவதி சோபியா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உதயகுமாருடன் தலைமறைவானார். இதை அடுத்து சுரேஷ்குமார் சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். போலீசார் காணாமல் போன ரேவதி சோபியா மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர். இதனால் சுரேஷ்குமார் கடந்த சில நாட்களாக மனமுடந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













