காஷ்மீரில் சிறையடைப்பு அதிகரிப்பு

0
1413

காஷ்மீரில் அமைதி திரும்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘144 தடை உத்தரவு படிப்படியாக சில இடங்களில் தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. என திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறினார்.


இந்நிலையில், ஏஎஃப்பி என்ற பிரான்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த 5ம் தேதி ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான அறிவிப்புக்கு முன்பும், பின்பும் பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்பு சட்டப்படி 4,000 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டப்பிரிவின்படி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம்.
இவர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சிறை நிரம்பி உள்ளது. கைது விவரங்களை அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை. மாஜிஸ்திரேட் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கைது விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 100க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பிரிவினைவாதிகளும் அடங்குவர்.
ஸ்ரீநகரில் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில், சுமார் 6,000 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் முதலில் ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ராணுவ விமானம் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சிலர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here