ரஜினிகாந்த் மதத்தை தேசியமாக கருதும் மனப்பான்மை கொண்டவர். அதை பயன்படுத்தி பாஜக அவரை முக்கிய சிக்கலின்போதெல்லாம் ஆழம்பார்க்க பயன்படுத்துகிறது.
தன் பட வெளியீட்டின் போது மட்டும் பரபரப்பு அறிக்கையிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் வழக்கம் உள்ளவர் ரஜினி. அவர் காவிரி பிரச்சினை, காஷ்மீர், ஸ்டெர்லைட் பிரச்சினையை தொடர்ந்து தற்போது இந்தி மொழி பிரச்சினையில் பாஜகவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இந்தி தின விழாவில் அமித்ஷா வெளியிட்ட கருத்து ஒன்றும் திடீரென உதயமானதல்ல, திட்டமிட்டு வாக்கியப்படுத்தப்பட்டதே. அதன்மூலம் நாட்டு மக்களின் மொழித்துடிப்பை நாடி பிடித்து பார்ப்பதே அவரின் நோக்கம்.
இதன்பின்னால் அவர் தொடர்புடைய இயக்கத்தின் சித்தாந்தம் உள்ளதும் உண்மையே. தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்ததும், ரஜினியை விட்டு ஒரு சமரசத்துடன்கூடிய முரண் பேட்டியை அளிக்க வைத்துள்ளனர் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
தமிழக மக்களின் மன ஓட்டத்தை புரிந்து, இந்தியை பொது மொழியாக்கினால் எதிர்ப்பு வரும் என்று கூறினாலும், பொது மொழியால் ஒரு நாடு முன்னேறும் என்ற அறிவியலுக்கு புறம்பான கருத்தை, மக்கள் சிந்தனையை சற்று குழப்பும் சிந்தனையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படி ரஜினிகாந்த் பாஜகவின் கருத்துப்பட விளக்கமாக பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே எதிர்காலத்தில் அவரது முன்னேற்றத்தை பாதிக்கும் என்கின்றனர் அவரது அபிமானிகள். பாஜகவை ஒட்டி அவர் கருத்து தெரிவிப்பதாலும், பாஜகவின் கருத்தறியும் கருவியாக பயன்படுவதாலும் நாளை அவரது அரசியல் பயணத்தின்போது மக்கள் மனதில் வெறுப்பும் சலிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அவர்கள் கருத்து.