பாண்டிச்சேரியில் தொடங்கியதா பாஜக கலவரம்?

0
1288

புதுச்சேரி சட்டசபைக்கு பா.ஜ.வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘சொல்லுங்கப்பு… இப்படித்தானே எல்லா இடங்களிலும் சொத்து வாங்கியிருக்கோம்?’ என்று ஒரு படத்தில் வசனம் பேசி வடிவேலின் கடையை வாங்குவார். பாஜக பல இடங்களில் ஆட்சி அமைக்க கடைப்பிடிக்கும் ஃபார்முலாவும் கிட்டத்தட்ட அதேபோல்தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இது குறித்துஅரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘ முதலில் தோழமை கொண்டு கூட்டணி அமைப்பது, பிறகு அந்தக் கட்சியை பிளப்பது அல்லது தம் கட்சியை திணிப்பது என்பதே பீகார், கர்நாடகா என பல இடங்களில் கையாண்ட அரசியல் ராஜதந்திரம். இதற்கு பயந்துதான் கூட்டு வைக்க தாமதம் காட்டி கோயில் கோயிலாக சுற்றினார் ரங்கசாமி. ஆனாலும் காத்திருந்து வளைத்து ஃபிப்டி, ஃபிப்டி பேசி , அது முடியாமல் கொஞ்சம் குறைத்து வாங்கி ’கேட்’டுக்குள் வரவழைத்ததனர். ரங்கசாமி முதல்வர் வேட்பாளர் என்பதையே ஒப்புக்கொள்ள தயங்கினர்.

ஒருவழியாக ரங்கசாமியின் என்.ஆர்.காங். 10, பாஜக 6 என்று ஸ்கோர் கிடைத்தது. துணை முதல்வருக்கு அடிப் போட்டு அதுவும் கிடைக்காத நிலையில், உறு மீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்காக காத்திருந்தனர்.

நடுவில் ஒரு சுயேட்சையை பேசி வைத்தனர். மேலும், ஓரிரு செங்கல்களை உருவ திட்டமிட்ட நிலையில், ரங்கசாமி கரோனா தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சூழலில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்து தங்கள் பலத்தை 10 ஆக (சுயேட்சையையும் சேர்த்து) உயர்த்திக்கொண்டனர்.

இதே நியமன தந்திரத்தை தான் முந்தைய ஆட்சிக்கு எதிராகவும் கடைப்பிடித்தனர். அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

சமீபத்தில், மே 14ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் பா.ஜ.வைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தும், சுயேட்சைகளுக்கு சிக்னல் கொடுத்தும் தயாராகினர். இப்போது ரங்கசாமி மருத்துவமனையில் இருப்பதால் அமைதி காக்கின்றனர்.

என்றாலும், அவர் குணம் பெற்று வந்து அமைச்சரவையை அமைக்க முயலும்போது இடையில் புகுவர். தங்கள் எண்ணத்தை ஈடேற்றாமல் பாஜக பின்வாங்குவதில்லை. தமிழ்நாட்டில் ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் ஆட்சியை பின்னிருந்து இயக்கியவர்கள், சரிக்கு சரி பாதியாக இருக்கும் புதுவையில் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழிசை கிரண்பேடி அவதாரம் எடுக்கும் வேளையும் வரலாம்” என்றார்.

பாவம் புதுவை மக்கள், கொரோனா சூழலில் அமைதியான நல்லாட்சி அவர்களுக்கு அமையுமா என்ற கேள்விதான் கடந்த ஓராண்டுக்கு மேலாக நிலவும் அவலமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here