மூன்றில் ஒரு பெண் வேட்பாளர் – அமைச்சர் தமிழ்நாட்டு பெண்களின் மகளிர் தின கோரிக்கை

0
531


மகளிர் தினம் என்பது கேளிக்கை விழாவாக மாற்றப்பட்டாலும், முற்போக்கு பெண்கள் அந்த நாளில் தங்களுக்கான கோரிக்கைகளை எழுப்பி போராடத் தயங்குவதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளுக்கு எதிராக உலகளாவிய இயக்கங்கள் இன்று நடக்கின்றன.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்துக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் அம்பிகை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவருவது மகளிர் தினத்தின் மிக முக்கியமான போராட்டமாக உள்ளது.

இதுபோல், சவுதி இளவரசியின் சுதந்திர போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அது சரியல்ல என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திஷா ரவி போன்ற சுற்றுச்சூழல் இயக்க பெண்களும் உலகளாவிய போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கமல்ஹாசனின் முன்முழக்கத்தை உள்வாங்கி திமுக தலைவர் ஸ்டாலின், தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். குடும்ப முன்னேற்றத்தில் பெண்களின் அன்றாட உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த கோரிக்கையை அதிமுகவும் ஆதரித்து வாக்குறுதி அளிக்கும் சூழல் உள்ளது.
இதற்கிடையே, மகளிர் தின கோரிக்கையாக என்ன வைக்கவுள்ளீர்கள். பெண்களுக்கு தேவை என்ன? என்று பல மகளிரிடம் கேட்டோம்.

‘மகளிர் தினத்தையொட்டி வரும் இந்த தேர்தலிலாவது அனைத்துக்கட்சிகளும் 3ல் 1 தொகுதியில் பெண்களை நிறுத்தவேண்டும். வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் கட்சியினர் அமைச்சரவையில் 3ல் 1 பெண்ணை அமைச்சராக பதவியமர்த்த வேண்டும்” என்றார் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த பொன்னி.
நெல்லையை சேர்ந்த லீலா, ‘ பெண்களுக்கு எதிரான கொடுக்மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆதாரத்துடன் கூறிய பாலியல் புகாருக்கு கூட பலனில்லாதது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை உணர்த்துகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை” என்று அசட்டையாக பதில் கூறியுள்ளதும் ஆட்சேபத்துக்குரியது” என்றார்.

தென்காசியை சேர்ந்த பாத்திமா பீவி, ‘ ஆபாசம், வன்முறை ஒழிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆபாசமாக பெண்களை சித்தரிக்கும் கலைப்படைப்புக்கு உரியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.” என்றார்.

நாகர்கோவில் லீமா ரோஸ், ‘ ஒரே வேலை, ஒரே ஊதியம், விவசாயம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்கள் முதல் அனைத்து பணிகளிலும் ஆண்களுக்கு போல் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

சுமார் 100 பெண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு, பெரும்பாலான பெண்கள் மூன்றில் ஒரு பெண் வேட்பாளர், அமைச்சர் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது அவர்களின் தேர்தல் கால விழிப்புணர்வை எவ்ளிப்படுத்துவதாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here