தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப் பகுதியில் மில்லர்புரம் கணேசன் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கதிரேசன் (31) என்பவர் நேற்று முன்தினம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
தனிப்படையினர் விசாரணையில் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28) என்பவருக்கும், இறந்த கதிரேசனுக்கும் இடையே இரண்டு மாதத்திற்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால், சுந்தராஜும் அவரது கூட்டாளிகளும் கதிரேசனை மது அருந்த அழைத்துச்சென்று அரிவாளால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கதிரேசன் சகோதரரர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படையினர், முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் முத்துக்குமார் (19), பாலகிருஷ்ணன் மகன் சுந்தர்ராஜ் (28),தாமோதர நகரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் நவீன் (20), அற்புதராஜ் மகன் செல்வம் என்ற ஆரோக்கியசெல்வம் (20) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை குற்றத்திற்கு பயன்படுத்திய மூன்று அரிவாள்கள், ஒரு கத்தி மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.












