நாங்குநேரியில் பள்ளி ரவுடிகளையும் உள்ளூர் ரவுடிகளையும் களையெடுக்க வேண்டும்

0
1522

நாங்குநேரியில் அம்பிகாபதி என்ற கணவரை பிரிந்து தாயுடன் வசித்த அப்பாவி பெண்ணின் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சின்னத்துரை என்ற மகனையும், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்திர செல்வி என்ற மகளையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டியுள்ளனர். இதை நேரில் கண்ட வெட்டுப்பட்ட மாணவரின் சின்ன தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துள்ளார்.

நாங்குநேரி வட்டார பகுதியில் நீண்டகாலமாகவே சாதி வெறி இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பரம்பரை சாதி உணர்வுடன் கிராமத்துக்குள்ளேயே, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் மக்கள். அவர்களிடையே, அனைத்து பகுதிகளிலும் போல், இணையம் மற்றும் பொதுவெளியில் பரவும் சாதி உணர்வு. அடுத்து, அரசியல் கட்சிகளில், குறிப்பாக ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியில் குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பொறுப்பு வகிப்பது.

இவை அனைத்துக்கும் மேலாக, இப்பகுதியிலே ஆளுமை செலுத்துகின்ற குறிப்பிட்ட சமய மடத்தின் தலைமை, தமது பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்கு 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை வளர்த்து வருகிறது. இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள்.

மாணவனின் தாத்தா உடலுடன் சாலை மறியல்

இங்கு நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் ஆகியவை சூழ்ந்த, மையமான முக்கிய இடத்தில் ஒரு அரசு பள்ளி இருந்தும், அங்கு போதிய மாணவர்கள் பயிலாமைக்கு உரிய காரணத்தை இதுவரை கல்வித்துறை ஆராயவில்லை அதுமட்டுமின்றி, அப்பள்ளியில் இதற்கு முன்பும் அடிக்கடி குறிப்பிட்ட பிரிவு மாணவர்களால் பிரச்சனை எழுந்தபோது அவற்றுக்கு சரியான தீர்வும் காணப்படவில்லை

.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவனை கண்டித்த ஆசிரியையை, அம்மாணவன் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தது. அந்த ஆசிரியை வேதனையில் வேலையை விட்டே விலகிவிட்டார். அதைக் கல்வித் துறை கண்டு கொள்ளவில்லை. பிரச்சனைக்குரிய மாணவனை தனியாக தேர்வு எழுதுமாறு கூறிய தலைமை ஆசிரியரை, உறவினர் சகிதமாக சென்று பெற்றோர்கள் மிரட்டியதையும் கல்வித்துறை கண்டிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவனின் தாத்தா, தாய்

அச்சம்பவத்திற்கு பிறகு சுமார் 700 பேர் வரை பயின்ற அப்பள்ளியில் இருந்து மாணவர்கள் சாரை, சாரையாக வெளியேறினர். ஆனாலும், வட்டாரத்தில் வேறு பள்ளிகளில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களையும், அங்கு சென்ற குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் மிரட்டியே வந்துள்ளனர்.

தற்போது அத்தகையோரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ள மாணவன் சின்னத்துரையை தாக்கிய மாணவர்கள் கொத்தடிமையை போலவே நடத்தியுள்ளனர். கடைக்கு போய் வரச் சொல்வது, பஸ்ஸுக்கு வைத்திருந்த காசை பிடுங்குவது, நோட்டை கிழிப்பது, சாப்பாட்டை கொட்டிவிட்டு பட்டினி போடுவது என்று தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.

அனைத்தையும் சகித்துக் கொண்ட சின்னத்துரையை, அவரது ஆசிரியை பாராட்டியது தான் சாதிவெறி மாணவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. அன்று மாலையே சின்னத்துரையை அவர்கள் மேலும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முறை, இது போன்ற கொடுமைகள் தொடர்ந்ததால், தனது துணி, மணியை எடுத்துக் கொண்டு, சென்னைக்கு சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்வதாக சின்னத்துரை அழுது அடம் பிடித்து இருக்கிறார். வெள்ளந்தியான தாய், அவரை ஆற்றுப்படுத்தி பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்.

ரத்தக்கறை படிந்த சின்னதுரை வீடு

மைனர்கள் பைக் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீதும் வழக்கு தொடுக்கப்படும் என்பது போல, இப்படி சாதி வெறியுடன் சக மாணவர்களிடம் நடந்து கொள்ளும் பெற்றோரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக பள்ளிக்கு வந்து மாணவனுக்கு ஆதரவாக ஆசிரியரை மிரட்டும் பெற்றோரை தயக்கம் இன்றி குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

நாங்குநேரி அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். உதவி செய்து, ஊக்கத்தொகை அளித்து, பயத்தால் இங்கிருந்து வெளியே சென்று படிக்கின்ற மாணவர்களை மீண்டும் அப்பள்ளிக்கு கொண்டு வந்து கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும். சாதி உணர்வு அடிப்படையில் சிறு சம்பவத்தில் மாணவர்கள் ஈடுபட்டாலும் அவர்களை உடனடியாக பள்ளியிலிருந்து நீக்க வகை செய்ய வேண்டும்.

பள்ளிகளில் உடனடியாக நல்லொழுக்க போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும். உடல் திறன் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். முந்தைய அரசு ஆணை கொண்டு வந்தது போல, பள்ளிக்கு ஒரு மனோதத்துவ ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி கல்விக் குழு போன்றவை முறையாக நடத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

வருகின்ற திங்கட்கிழமை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியரையும் ஆலோசனை நடத்த கலெக்டர் அழைத்துள்ளார்.

அக்கூட்டத்துக்குப் பின்பாவது, , மாவட்டத்தில் சாதி கட்டிறுக்கம் கொண்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஸ்கூல் ரவுடிகளை களை எடுப்பதோடு, பள்ளியை சுற்றிய பகுதிகளில் இருக்கின்ற சாதி ஆணவ ரவுடிகளையும் போலீசார் மூலம் அகற்ற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டை கொலைக்கு பின்பு பகுதி ரவுடிகள் வெளி மாவட்டங்களுக்கு விரட்டப்பட்டார்கள். இப்போதும் அது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கடும் தண்டனையும், பாதிக்கப்பட்ட இருவருக்கும் மனநல ஆலோசனையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அரசே தனிக் கவனம் எடுத்து, அவர்களுடைய பள்ளி கல்லூரி கல்வி காலம் வரை பாதுகாப்பும் உதவியும் வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here