கிழக்கு ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் துவரம்பருப்பு தமிழர் சமையலில் முக்கிய உணவுப்பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப் புரதச்சத்துக் கொண்டது
வட இந்தியாவில் இதை ஒரு தனி உணவாகவே சாப்பிடுவார்கள். தென்னிந்தியாவில் சாம்பார், ரசம், கூட்டு வகையாக உண்ணுகிறோம்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி வம்சத்தினர் தன சாம்பாரை இங்கு அறிமுகம் செய்தனர். ஆனால், அதற்கு முன்பே பருப்புக்குழப்பு செய்யும் பக்குவம் தமிழர்களுக்கு தெரிந்திருந்தது.
தோரை, யவை, காச்சி, ஆடகி, ஆடகம் என்று பல பெயர்களில் துவரம்பருப்பை நம்மவர்கள் அழைத்தார்கள்.
ஆந்திராவில் சாப்பாட்டில் பருப்பு பொடி கலந்து சாப்பிடுவார்கள். நாம் சாம்பாராக்கி சேர்க்கிறோம். இட்லி, தோசைக்கு மட்டுமல்ல, சோற்றுக்கும் சாம்பார் பயன்படுத்துகிறோம்.
துவரம் பருப்பு புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஃபைபர் மற்றும் புரதத்தின் பசி துயரை தடுக்கிறது. கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. துவரம் பருப்பில் அதிக புரத உணவு பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
இதில் வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் மற்றும் தாதுக்கள் மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் ஆகியவை உள்ளன.
இதில் உள்ள ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது. கருவின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் புதிதாகப் பிறந்தவர்களில் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தவிர்க்கிறது. இதில் உள்ள கிளைசெமிக் நீரிழிவு நோயாளியின் உணவாகும் தகுதியை இதற்கு அளிக்கிறது.
துவரம் பருப்பில் இரும்பு மற்றும் ஃபோலேட் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி, இரத்த சோகையை சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
துவரம் பருப்பில் உள்ள வளமையான பொட்டாசியம் வாஸோடைலேட்டராக செயல்பட்டு இரத்தக் கட்டுப்பாட்டைக் குறைத்து இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், உணவில் துவரம் பருப்பை தவறாமல் சேர்க்க வேண்டும்.
துவரம் பருப்பில் குறிப்பிடத்தக்க அளவுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்றவை வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கும், அதிகப்படியான கொழுப்பைச் சேமிப்பதைத் தவிர்ப்பதற்கும், ஆற்றல் அளவை உயர்த்துவதற்கும் உதவுகின்றன. இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக வைத்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.
உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி, சோற்றுடன் இதையும், பசுவின் நெய்யையும் கலந்து சாப்பிட்டால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும்.
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் இரத்த குழாய் விரிப்பானாகச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
அடிபட்ட காயங்கள், புண்கள் வெகு விரைவில் ஆறுவதற்கும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. துவரம் பருப்பு உணவு அதற்கு ஏற்றது.
எதிர்பாராதவிதமாக அடிபடும் போது சிலருக்கு உடலில் அடிபட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படுகின்றன. மேலும் இது தீவிரமடைந்து அழற்சியும் உண்டாகிறது. துவரையில் உள்ள கனிமச்சத்துகள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் ஏற்படுத்துகிறது.
துவரையில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.
துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும் இந்த நார்ச்சத்து உதவுகிறது.
துவரம்பருப்புடன் புழுங்கலரிசியை சேர்த்து துவரம்பருப்பு தோசை சுடலாம்.
துவரம்பருப்பை கொண்டு சத்துள்ள பருப்பு பொடி செய்வது எப்படி?
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடாக்கி, 1 கப் துவரம் பருப்பை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். பின் 1/2 கப் கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
அதே கடாயில் 10 காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிது கருவேப்பிலை, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பை தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும். இறுதியாக பொட்டுக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்றாக ஆறவைத்து மிக்சியில் மைபோல் அரைத்தெடுக்க வேண்டும்.
இதேபோல், துவரம் பருப்புடன் கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி சேர்த்து பருப்பு உருண்டைக் குழம்பு என்கிற மாவுக்குழம்பு தயாரிக்கலாம்.
துவரம் பருப்புடன் 5ல் 1 பங்கு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நைசாக அரைத்து குழைத்து, உடல்முழுவதும் பூசி குளித்தால் கரும்புள்ளி, தேமல், வறட்சி நீங்கும்.
துவரம் பருப்பு, கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்து தண்ணீர் சேர்த்து, குழைத்து உடலில் முடி உள்ள இடங்களில் பூசி, உலர்ந்ததும் தண்ணீர் விட்டு அலசினால் முடி உதிரும். அடுத்து முடி முளைக்காமலும் தடுக்கும்.
நல்லெண்ணெயில் சில மிளகு போட்டுக் காய்ச்சி தலையில் மசாஜ் செய்யவேண்டும். அதன்பிறகு, சீயக்காயுடன் துவரம் பருப்பு,சுட்ட வசம்பு, கறுப்பாக்கிய வசம்பு, வேப்பங்கொட்டை, உலர்ந்த நெல்லி, வெந்தயம் சேர்த்து அரைத்த பொடியை சுடுநீரில் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு அலசினால் பேன், பொடுகு ஈறு அகலும். முடியும் மிருதுவாகும்.
அதேபோல், துவரம்பருப்பு, பாதியளவு வெந்தயம், தயிருடன் தோல் நீக்கிய பூந்திக் கொட்டை சில எடுத்து இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து, தலையில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அலசினால் முடி மிருதுவாகும்.
துவரம்பருப்புடன் இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகுத்தூள், கொத்துமல்லி, வெங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிடால் பசியைத் தூண்டும். இவற்றுடன் தக்காளி சேர்த்தும் சூப் வைக்கலாம். இதில், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, சோம்பு போன்றவை சேர்க்கப்படுகிறது. மசாலாப்பொருட்களை தனியாக அரைத்து கொதிக்கவைத்த சூப்பில் சேர்க்கவேண்டும்.
துவரம் பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பதால் துவரம்பருப்பின் மேல் செம்மண்ணைப் பூசிக் காய வைத்து, பின் கழுவி எடுத்துப் பயன்படுத்துவார்கள்.
உடலுக்கு வலு அளிக்க தயாரிக்கப்படும் பஞ்சமுட்டிக் கஞ்சி’யில் துவரை முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகிறது.
துவரம் பருப்பு ரசம் செரிமானக் கோளாறுகளை நீக்கப் பயன்படுகிறது. பத்திய உணவாகவும் துவரம் பருப்பு பயன்படுகிறது.
துவரம்பருப்புடன் கேசரிப் பருப்பு கலக்கப்படுகிறது. கேசரிப் பருப்பு வட்டமாக இல்லாமல், ஓரளவு சதுர வடிவத்தில் காணப்படுவதை வைத்து கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்.
துவரம்பருப்பு மனிதருக்கான உணவு என்பதோடு, துவரை செடி கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாகவும் பயன்படுகிறது. நிலத்துக்கு வளம் சேர்க்க துவரை செடியை மூடாக்கு போடுவதும் உண்டு.















