நாங்குநேரி: கச்சை கட்டும் சாதி கட்சிகள்

0
1926

 

தமிழகத்தில் தேர்தல் என்றாலே முதலில் களமிறங்குபவை சாதிக் கட்சிகள்தாம். அந்த வகையில் நாங்குநேரியில் அவை நாமிநேஷனுக்கு முன்பே டாமினேஷன் செய்கின்றன.
இங்கு நாடார், தேவர், தாழ்த்தப்பட்டோர், கோனார் வாக்குகள் முறையே முன்னிலையில் இருக்கின்றன. நாடார் வாக்குகளை குறிவைத்து பனங்காட்டுப்படை கட்சியினர் ஆரம்பத்திலேயே ஆஜர்.

பொதுவாக சாதி அமைப்புகள் கட்சிகளின் அணிகள் போலத்தான். காசு, காரியம், வழக்கு, மரியாதை என எதையாவது முன்னிறுத்தி பிரதான கட்சிகளை பின்தொடரும். வழியில்லையென்றால், எதிர்நிற்கும்.
அப்படித்தான் பனங்காட்டு படையின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரும் அதிமுகவுடன் அண்டர்ஸ்டாண்டிங் பண்ண நினைத்து அது பலனளிக்கவில்லை. இதுவரை உள்ளாட்சி தேர்தலில் கூட நின்று பலத்தை நிரூபிக்காததால் ஆளுங்கட்சி தலைமை தயங்கியதாக கூறுகின்றனர்.

எனவே, முதல் ஆளாக தொடை தட்டி தொகுதி உலா வருகிறார். கழுத்து, கைகளில் மின்னும் நகைகளுடன் அவருக்கே உரித்தான ஹேர் ஸ்டைலுடன் வாக்கு கேட்டுவரும் அவரை நாடார் சாதி அமைப்பொன்றின் பிரதிநிதியாகிய கப்பல் முகநூலில் மட்டம் தட்ட, வீணாக ராக்கெட் ராஜாவின் சினத்துக்கு ஆளாகியுள்ளார் கப்பல். அவரை போனில் அழைத்து ‘பதிவுக்கு பதில் போடாவிட்டால் தொலைந்தாய்’ என்று ராக்கெட் ராவியெடுத்துவிட்டார்.

இது இப்படியிருக்க, தேவர் சமுதாய அமைப்பு ஒன்றின் தளகர்த்தரான ஸ்ரீவை சுரேஷ் கடந்த தேர்தலில் பார்வர்ட் பிளாக் சார்பில் நின்று கைப்பற்றிய கணிசமான வாக்குகளை காட்டி கனியவைத்துவிட்டதாகவும், அதனால், எப்போது தேர்தல் அறிவித்தாலும் நாங்குநேரி தொகுதி சுவர்களில் பெயர் தீட்டிவிடும் அவர், இம்முறை வெள்ளையடித்த சுவரை வெறித்து பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.

மருத்துவர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றனர். ஜான்பாண்டியன், சாத்தை பாக்யராஜ், மறைந்த பசுபதிபாண்டியன் ஆகிய மண்ணின் சொந்தங்களின் தலைமையை ஏற்ற அமைப்பினரும் மௌனமாகவே இருக்கின்றனர்.

இவர்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக அமைப்பினருக்கு தேர்தல் களம் போராட்டக்களமாகிவிட்டது. தங்கள் சாதிப்பிரிவுகளை ஒரே பெயரில் அழைக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி கடந்த தேர்தலில் ஆதரவை பெற்றுவிட்டு பாஜகவும் அதிமுகவும் பெப்பே காட்டிவிட்டதால், கருப்பு கொடியேற்றி எதிர்ப்பில் இறங்கிவிட்டனர். அதனால் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

யாதவர்கள் என வழங்கப்படுகின்ற கோனார் சமுதாயத்தினர் சற்று சுதாரித்துக்கொண்டனர். பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து யாதவர் சேனையாக்கி, மரியசுந்தரம், நம்பிராஜன், ராமச்சந்திரன் ஆகியோரில் ஒருவரை களமிறக்கும் ஆயத்தத்தில் உள்ளனர்.

இதுதவிர, பிற சமூகத்தினர் யாரும் தேர்தல் பற்றி பேசவில்லை. என்றாலும், வெள்ளிக்கிழமை மாலை வரை 70 வேட்பு விண்ணப்பங்களை பலரும் பெற்றுச்சென்றுள்ளார்கள். அதில் 9 விண்ணப்பங்கள் மட்டும் நிரப்பி அளிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்க்குல வேங்கை ஏதாவது பதுங்கிப்பாய்கிறதா என காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(கள ஆய்வு தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here