108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி விட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை நடைபெற்றது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது.
இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் வைக்கப்பட்டு அதன் பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்பட்டது.
அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டு ஜலவாசம் செய்யும் அத்தி வரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு (2059-ம் ஆண்டு) மீண்டும் அருள்பாலிக்க வருவார்..














