தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாக திறக்கப்படாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளார். சென்ற ஆட்சியில் காலத்தில் கரோனா நோய் பரவலின் போது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த ஓரே காரணத்தால் அந்த ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மட்டும் திறக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது.
அவர்கள் கூறிய அளவுக்கு ஆக்சிஜன் தர முடியாவிட்டாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய அளவுக்கு அங்கே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதை தெளிவாக தமிழக அரசு தன் வாதத்தின் வழியாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது. அதனால் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை.
இப்போதைக்கு தேவையில்லை என்பதால் ஆலையை மூடிவிடலாம். 3ஆவது அலை ஏற்பட்டு ஆக்சிஜன் தேவையிருந்தால் பார்த்துக்கொள்ளலாம். மேலும், தமிழ்நாட்டின் மக்களின் தேவைக்கு ஏற்ப ஆங்காங்கே ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களிலும் இருந்து ஆக்சிஜன் வாங்கக்கூடிய மோசமான நிலை மறுபடியும் வராது. ஏனென்றால், கேரளா மாநிலத்தில் 3ஆவது அலைக்கான அறிகுறிகள் தெரியும்போதே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி விட்டார்.
ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை குளிர்விக்கும் கருவியின் செயல்பாட்டை ஓரே நாளில் நிறுத்திவிட முடியாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் நிறுத்த வேண்டும். மேலும், அங்கு தேக்கி வைத்துள்ள ஆக்சிஜனையும் எடுக்க வேண்டும். அதற்காக தான் அங்கு குறைந்தபட்ச மின்சாரம் வழங்கப்படுகிறது. கண்டிப்பாக மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும்’
என்றார் அவர்.












