தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி தற்போது, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தீவனம், விலை மற்றும் இதர இடு பொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும்,
எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு 19.8.2019 (நாளை) முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது