எதிரி இல்லாத களத்தில் கம்பு சுற்றும் இந்துத்வ இயக்கங்கள்

0
1814

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சம்பன்குளத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்களும், சிறுபான்மை இந்துக்களும் வசித்து வருகின்றனர். இதுவரை எந்த பிரச்சினையும் இல்லாத ஊரில் யாரோ ஒருவர் போட்ட மொட்டை கடுதாசிக்கு அரசு அதிகாரிகள் கூந்தல் முடிந்து பூச்சூடியதால் சிக்கல் சுனாமி அலையாக அடிக்கிறது.
பச்சைமால் என்பவர் பட்டா நிலத்தில் நிறுவப்பட்ட காட்டுபச்சாத்தி மாடன் கோயிலில் பீடத்தை புதுப்பித்து அமைக்க முயன்றபோது யாரோ கோயில் புறம்போக்கு இடத்தில் அமைந்ததாக மொட்டை கடுதாசி எழுத, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க அங்கு சென்ற தாசில்தார் சண்முகம், ஆராயாமல் கோயிலை முழுதுமாக இடித்துதள்ளிவிட்டார்.
இதை அறியாமல் சில இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர் தூண்டுதலில் கோயில் இடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் கொளுத்திப்போட, வதந்தி சலங்கை கட்டி ஆடியது. அகில பாரத இந்து மகாசபா, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் ஊரில் சென்று பேசியதோடு பரிகார பூசையும் நடத்த முயன்றதால் பரபரபு ஏற்பட்டது.
தற்போது கோயிலை கட்டிக்கொள்ளுமாறு சமாதான கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். முறையான புகார் செய்யப்படாத நிலையில், கோயில் பகுதியை பார்வையிட்டு, குழப்பம் இருந்தால் சீல் வைத்து, ஆதாரங்களை வரவழைத்து இறுதி முடிவெடுத்திருக்கலாம். மாறாக, அவசர குடுக்கையாக தாசில்தார் மேற்கொண்ட நடவடிக்கை அதூறுகளை கிளப்பிவிட்டது. நல்லவேளையாக மோசமாக விளைவு நேரவில்லை. எனினும் இத்தகைய பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய வருவாய் துறையினர் மீது விசாரணை நடத்தப்படவேண்டும் என அப்பகுதியில் மத நல்லிணக்கம் பேணும் இரு பிரிவினரும் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here