விளைநிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க கூடாது என கலெக்டர் காலில் விழுந்து விவசாயிகள் மனு

0
472

.

கோவையை அடுத்த அன்னூர் பகுதியில், தொழிற்பேட்டை அமைக்க  4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1504  ஹெக்டேர் நிலத்தை  கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க,மாவட்ட ஆட்சியர் வாயிலாக  டிட்கோவின் முதன்மை இயக்குநர் தமிழக அரசிடம் கோரியிருந்தார்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் கால்களில் விழுந்து விவசாயிகள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மனுவில், ’அன்னூர் சுற்று வட்டார,  குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது . எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு  புதிய வசந்தம்  வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில்  விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல்  என்பதற்கான முயற்சி எங்களின் மனதை இடிபோல் தாக்கி நிலை குலைய வைத்துள்ளது . விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 1000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது .

மேலும்,கடந்த 2ஆம் தேதி ஜனநாயக வழியில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது . இந்நிலையிலும் எந்த முறையான அரசு அறிவிப்பும் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது, தொழிற்பேட்டை திட்டம் ரத்து  என்ற சட்ட பூர்வ அறிவிப்பு அரசு வெளியிடவேண்டும்’   என குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here