கடந்த 3ஆம்தேதி தனசேகர் என்பவர் எலைட் சரவணா நகைக்கடையில்-பழைய தங்க நாணயங்கள் கொடுத்து 3 சவரன் தங்க சங்கிலி வாங்கியுள்ளார். அப்போது, தான் ஊடகத்துறையில் இருப்பதாகவும், கடையின் சங்கிலி போலியான நகை என்றும் மிரட்டி ரூ.15 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று 5 மணிக்கு 15 பேருடன் அதே கடைக்கு வந்து, மேலும் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டியதாக உரிமையாளர் சிவ அருள் துரை சென்னை காவல் துணை ஆணையருக்கு புகார் தெரிவித்தார்.
துணை ஆணையர் வந்தபோது தனசேகர் உட்பட 9 பேர் பிடிபட்டனர். அவர்கள் வந்த இரு கார்களும் கைப்பற்றப்பட்டன.
தனசேகரிடம் இருந்து போலியான பத்திரிகை, காவல் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவா என்பவரிடமிருந்து ஏர் கன் பறிமுதல் செய்யப்பட்டது.ஜீவா அரசியல் பிரமுகர் என்றும், மிரட்ட வந்தவர்களில் 5 பேர் வக்கீல்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி நிருபர்களை கைது செய்த செயல் பாராட்டத்தக்கது என்றாலும், முதல் முறையாக ரூ.15 லட்சம் அளித்து அனுப்பியதேன் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதேபோல், தாங்கள் நகையின் தரம் பற்றி புகார் கொடுக்க வந்த நிலையில் போலிசார் கைது செய்தனர் என வக்கீல்கள் சொல்வதாலும் குழப்பமாக உள்ளது என்கின்றனர்.













