அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்ட சூட்டோடு விடுத்துள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்கவும்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும்;
அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும்; அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும்; தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 9 ஆம் தேதி நடைபெறும்.
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக, பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் அளவுக்குக் குறைத்துவிட்டு கள்ள மௌனம் காக்கிறது. மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் செய்திருப்பதைப் போல வரிக் குறைப்பை செய்து, பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தமிழ் நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் அண்மையில் பெய்த பெருமழையால் தங்கள் வீடு, வாசல்களை இழந்துள்ளனர். அன்றாடம் வேலைக்குப் போய் தினக் கூலி ஈட்டி வாழ்வை நடத்தும் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். அரசின் சார்பில் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒருசில இடங்களில், ஒருசில குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சிற்சில உதவிப் பொருட்களைத் தவிர, ஓர் அரசு தனது பொறுப்பை உணர்ந்து அளிக்க வேண்டிய உறுதியான மறுவாழ்வு உதவிகள் இன்னும் வழங்கப்படாததை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டிக்கிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. உரிய நேரத்தில், சரியான பயிர் இழப்பீடுகளையும், மறுசாகுபடிக்குத் தேவையான உதவிகளையும் அவர்களுக்கு வழங்காவிட்டால் அது, மாநிலத்தின் மொத்த பொருளாதாரத்தையும், நிலமற்ற கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மிக ஆழமாக பாதித்துவிடும் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.
எனவே, நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000/- ரூபாய் என நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்; மறு சாகுபடிக்கென ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000/- ரூபாய் அளிக்கப்பட வேண்டும்; கரும்பு, பருத்தி, கிழங்கு வகைகள்,
, வாழை என்று மற்றவகை விளைச்சலை இழந்தோருக்கு முழுமையான நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பொங்கல் விழாவைக் கொண்டாட மக்கள் அனைவருக்கும் ரொக்கமாக உதவித் தொகை தருவது, இன்று நிலவும் கொரோனா சூழலில் மிகவும் இன்றியமையாதது. மழை, வெள்ள பாதிப்புகளையும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்புகளையும், உற்பத்தி வீழ்ச்சியையும், விலைவாசி உயர்வையும் கருத்தில்கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 5,000/- ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களின் போது மக்களுக்கென உருவாக்கப்பட்ட முன்னோடித் திட்டங்கள் பலவற்றை இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்கள், தாமும் செயல்படுத்த ஆர்வம் காட்டிவரும் சூழ்நிலையில், அந்தத் திட்டங்களை எல்லாம் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், கழகத்தின் புகழ் மீது கொண்ட பொறாமையாலும் முடக்கிப்போட திமுக அரசு முயற்சிக்கிறது.












