மகாராஷ்டிரா: நந்தவனத்து ஆண்டிகளான பாஜக, சிவசேனா

0
798

மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணிக்கு ஆளும் உரிமையை வாக்காளர்கள் வழங்கியது உண்மை. பெரும்பான்மை பலம் இருந்தும் ஜனநாயகத்தை தவறாக கையாண்ட குற்றச்சாட்டுக்கு இரு கட்சியினரும் ஆளாகினர்.
அதன்பிறகு எதிர்க்கட்சிகளாக செயல்பட வாக்களிக்கப்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற சிவசேனா துடித்தது. கால அவகாசம் இல்லாததால் காங்கிரஸ் முடிவு தாமதமானது.
பாஜக ஆட்சியமைக்க 72 மணி நேர அவகாசம் வழங்கிய நிலையில், சிவசேனா ஆட்சியமைக்க 24 மணி நேரம் மட்டுமே ஆளுநர் பகத்சிங் கோஷ்வாரி அவகாசம் அளித்தது குறித்து சர்ச்சை கிளம்பியது.
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை அதற்கான விளக்கம் அளித்தது. ‘சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால், ஆதரவு கடிதம் தரவில்லை. ஆதரவு இல்லாததால் 3 நாட்கள் அவகாசம் தரமுடியாது என ஆளுநர் சார்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று விளக்கம் கூறப்பட்டது.
உத்தவ் தாக்ரே மகன் ஆதித்ய தாக்ரே. ‘ இரு நாட்கள் அவகாசம் கேட்டோம், தரவில்லை’ என்றார். ஆனால், ‘ காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்கவில்லை’ என்றும் ஒப்புக்கொண்டனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் விதித்த நிபந்தனைப்படி பாஜக உறவை சிவசேனா உதறியது அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போலாயிற்று.
ஆனாலும், ‘ தொடர்ந்து தேசியவாத காங்கிரசுடன் பேசி வருகிறோம்’ என்றார். காங்கிரசின் அபிஷேக் சிங்வி, ‘ 48 மணி நேர அவகாசம் அதிக நேரமில்லை, ஆளுநர் அளித்திருக்கலாம்’ என்றார். இதன்மூலம் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க ஓரளவு ஒப்புக்கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் வந்ததும், ஆலோசிக்க அவகாசம் எடுக்க நினைத்ததும் தெரியவந்துள்ளது.

அவர்கள் நீளமாக சிந்திப்பதிலும் நியாயம் இருக்கிறது. கர்நாடக அரசியல் காட்சிகள் அவர்கள் மனக்கண்களில் வந்துபோனது முக்கிய காரணம். மேலும், சிவசேனாவுடன் கூட்டணி வைக்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ரைட் என்றாலும், இந்திய ஒன்றிய தலைவர்கள் ‘ வெயிட்’ என்றார்கள். இப்போது சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் எதிர்காலத்தில் நமக்கான வாக்கு வங்கி குறைந்துவிடும் என்று எச்சரித்தார்கள்.
ஆதித்திய தாக்கரேவை முதல்வரானால், சிவசேனா மற்றும் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே உறுதி அளித்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் அதை மறுக்க முயன்றாலும், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாருக்கு ஆகுமே என்று இழுவையில் இருந்தது.
பாஜகவினர் பதற்றப்படவில்லை. சிவசேனா நடவடிக்கை தங்களுக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை உருவாக்கும். சிவசேனா & தேசியவாத காங்கிரஸ் & காங்கிரஸ் கூட்டணி, நீடிக்காது, நிலைக்காது என அது நம்புகிறது. அப்படி கூட்டணி சரிந்தால் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு அறுவடை அமோகமாக இருக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
இவ்வாறாக, ரகசிய சந்திப்பு, அவசர ஆலோசனை என மாறி, மாறி நடத்தி சிவசேனா _ தே.வா.காங்கிரஸ் _ காங்கிரஸ் ஒரே அலைவரிசைக்கு வந்த நிலையில், அரசியல் பருவநிலை சற்று செயற்கையாக மாற்றப்பட்டது.

இரவில் தேசிய வாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அஜித்பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
விளையாட ஆசைப்பட்டது சிவசேனா, பந்தோ தேசியவாத காங்கிரஸ் கையில். இனி, யார் மேலாகவும், கீழாகவும் இருப்பர். எப்படி உடன்பாடு எட்டப்படும்? இந்த அவகாசத்துக்கு பின்னும் வேறு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சிக்கான சூழல் வந்தால் யார் மீது மக்கள் கோபம் திரும்பும்?
‘ தனது மகனை முதல்வர் ஆக்குவதற்காக கூட்டணி தர்மத்தையும் உடன்பாட்டையும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே மீறி விட்டார்’ என்ற பலி நிலைக்குமா, மத்தியில் ஆளும் பாஜக மாநிலத்தில் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்ற பெருந்தன்மை பேச்சு எழுமா தெரியவில்லை.
எவ்வாறாயிலும், இதில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீது பழி சுமத்த வாய்ப்பில்லை. திடீர் ஆதரவு பற்றி அவர்கள் சிந்தித்தே தீரவேண்டியுள்ளது. ஆனால், மக்கள் சரியான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், அவர்களின் தீர்ப்பை மகாராஷ்டிரா சிவசேனா, பாஜக கட்சியினர் அலட்சியப்படுத்தி விட்டனர் என்பதே உண்மை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here