சட்டமன்ற தேர்தலுக்கான காலம் நெருங்கி வர வர கட்சிகளின் தடாலடி வேலைகள் தொடங்கிவிட்டன. திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி கட்சியை பலப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுக கூடாரம் அநாவசிய குழப்பத்தால் கலகலத்து வருகிறது.
‘முதலமைச்சர் வேட்பாளர் யார்’ என்று பொதுவில் கொளுத்தப்பட்ட கேள்விக்கு தேவையில்லாமல் தலையை கொடுத்து பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி ‘ எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொன்ன தினத்திலேயே பிரச்சினை தொடங்கிவிட்டது.
சமீபத்தில் சுமார் 300 பேர் கலந்துகொண்ட அதிமுக செயற்குழு கூட்டத்தில் பிரச்சினை பெரிதானது. ‘முதலமைச்சர் ஈபிஎஸ் வாழ்க’ என்றும், ‘வருங்கால முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்க’ என்றும் வெளியே எழுந்த கோஷம் உள்ளுக்குள் விவாதத்தில் பிரதிபலித்தது.
காரசாரமாக நடந்த விவாதத்தின் விளைவாகவே கூட்டம் முடிந்துவந்த கேபி முனுசாமி , ‘ வரும் 7ஆம்தேதி முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்’ எனக் கூறவேண்டிவந்தது.
அதிமுகவில் குழப்பம் ஏதுமில்லை என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் வைத்தியலிங்கம் சொன்னாலும் கலகம் தொடங்கிவிட்டது உறுதியாகிறது. .
அதிமுக செயற்குழுவில் ஏற்பட்டுள்ள முட்டல் போதல் எதேச்சையானதல்ல. அதிமுகவை பயன்படுத்திவிட்டு சிதைக்கும் எண்ணம் பாஜகவின் அஜென்டா என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
‘அதிமுகவை உடைத்தாலொழிய பாஜகவின் வளர்ச்சியை அடையமுடியாது என்பது அவர்களது நிலைப்பாடு.
மத்திய அரசு இயற்றும் திட்டங்களுக்கு தலையசைக்க அதிமுகவை பயன்படுத்திவிட்டு, இறுதியாக குழப்பம் மூலம் அதை குலைத்து தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த பாஜக முயலும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதே.
ஓபிஎஸ் நடத்திய மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாமல் ஆதரவாளர் கூட்டத்தை நடத்திய ஓபிஎஸ் ஆவேசம் சாதாரணமானதல்ல. போதாக்குறைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ்சை சந்தித்தது யதார்த்தமானதல்ல.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்றே சில அமைச்சர்கள் கலந்து பேசியபோது அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். இப்போது மேலும் வருத்தம் அடைந்துள்ளனர். காலம் வரும் வரை காத்திராமல், அவசர, அவசரமாக முதல்வர் பிரச்சினையை கிளப்புவதும் உள்நோக்கமுடையது.
சசிகலா விடுதலையானால் அதிமுக ஒட்டுமொத்தமாக அவரிடம் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளர் என்ற பிரச்சினையை தொடங்கி குழப்பத்¬தை ஏற்படுத்துகிறார்கள். அதேவேளை, சசிகலா தரப்புக்கும் நிர்பந்தம் கொடுக்கிறார்கள்’ என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதை முன்மொழிவதுபோல், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும், மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நிகழவுள்ளதாகவும் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பாஜக மாநில தலைவர் முருகன் குறிப்பிட்டதை கூறுகின்றனர். எவ்வழியிலாவது பாஜக மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதே அவர்கள் நோக்கம் என்பது உறுதியாகிறது.
ஆயிலும், இக்கலகத்தால் தமிழகத்தின் ஒரு பேரியக்கம் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக சிதைவு என்பது மாநில கட்சி, திராவிட (தமிழ்) இயக்கம் ஒன்றின் வீழ்ச்சி. உட்கட்சி சீர்திருத்தம் என்றும் வரலாம். ஆனால், அதற்குள் கட்சி உடைந்தால் மாநிலத்துக்கு நன்மையல்ல என்பதே உறைக்கும் உண்மை.














