நெல்லையில் ரெம்டெசிவீர் விற்பனை திடீர் நிறுத்தம்

0
1210

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் ரெம்டிசிவீர் மருந்து தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், ரெம்டெசிவீர் மருந்தை தேவைக்கேற்ப கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், நெல்லை , மதுரை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவீர் மருந்து விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்திருந்தார். நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நேற்றைய தினம் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.
உரிய ஆவணங்களுடன் வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டது. 6 இன்ஜக்சன் கொண்ட மருந்து பாக்கெட் ரூபாய் 9408க்கு விற்பனை செய்யப்பட்டது .


தனியார் மருத்துவமனைகளிலும் வெளி சந்தைகளிலும் 20,000 முதல் 40,000 வரை இந்த மருந்து விற்கப்பட்ட நிலையில், இங்கு குறைவன விலைக்கு விற்கப்பட்டதால், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து அதிகமான பொதுமக்கள் வரத் தொடங்கினர்.
நேற்று 24 நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் விற்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ‘ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருந்து விற்பனை இல்லை’ என அரசு மருத்துவக் கல்லூரி முன்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, மருந்து விற்பனைக்கான இடம் மட்டுமே தாங்கள் வழங்கியுள்ளதாகவும், மருந்தை நேரடியாக தமிழ்நாடு மருந்து விற்பனைக் கழகம் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.
நோயாளிகளின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here